Last Updated : 13 Jan, 2017 04:44 PM

 

Published : 13 Jan 2017 04:44 PM
Last Updated : 13 Jan 2017 04:44 PM

சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல்

முந்தைய கணிப்புகளுக்கு மாறாக சந்திரன் 4.51 பில்லியன் ஆண்டுகள் பழையது என்றும் முந்தைய கணிப்பைக் காட்டிலும் 140 மில்லியன் ஆண்டுகள் பழையது என்றும் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

1971-ம் ஆண்டு சந்திர மண்டலம் சென்ற அப்பல்லோ 14 மிஷன் மூலம் சந்திர மண்டலத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வரப்பட்ட ‘ஸிர்கான்ஸ்’ (Zircons) என்ற கனிமத்தின் ஆய்வு முடிவுகளின் படி இந்த முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.

சந்திரனின் தோற்றம், வயது ஆகியவை அறிவியல் துறையில் சூடான ஆய்வுகளையும் விவாதங்களையும் கிளப்பிய ஒரு விவகாரமாகும்.

ஆதி பூமியுடன் ‘கிரக மூலக்கரு’ என்று அழைக்கப்படும் ‘தீய்யா’ நேருக்கு நேர் பயங்கரமாக மோதியதன் விளைவால் உருவானதுதான் சந்திரன்.

சூரியக் குடும்பம் உருவான பிறகு 6 கோடி ஆண்டுகள் கழித்தே சந்திரன் உருவாகியிருக்கலாம் என்று இந்த புதிய ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வை மேற்கொண்ட கலிபோர்னியா மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் பல்கலைக் கழக ஆய்வாளர்கள், தீய்யா என்ற கிரக மூலக்கருவுடன் ஆதி பூமி மோதுவதற்கு முன்பாக என்ன இருந்தது என்பதை அறிய முடியாது என்று கூறிய போதும் இந்த மோதலுக்குப் பிறகு என்ன நடந்திருக்கும் என்பதை தகவல்கள் மூலம் ஆய்வு செய்து கண்டுபிடிக்க முடியும் என்று கூறுகின்றனர்.

சந்திரனின் வயதைக் கணக்கிடுவது மிக மிகக் கடினம், ஏனெனில் பலதரப்பட்ட பிற பாறைச்சிதறல்களின் ஒட்டுவேலைதான் சந்திரன் என்பது. ஆனாலும் ஆய்வு விஞ்ஞானி பர்போனி 8 ஜிர்கான்களை அதன் ஆதி வடிவத்தில் ஆய்வு செய்ய முடிந்துள்ளது.

இதில் உள்ள யுரேனியம் எவ்வாறு காரீயமாக சிதைமாற்றம் அடைந்துள்ளது என்றும் லியூட்டியம் என்பது எவ்வாறு ஹாஃப்னியம் என்பதாக சிதைமாற்றம் அடைந்துள்ளது என்பதை பர்போனி ஆய்வு செய்துள்ளார். இந்த மூலக்கூறுகளை ஆய்வு செய்தே சந்திரனின் வயதை மறு நிர்ணயம் செய்துள்ளனர்.

“ஸிர்கான்கள் இயற்கையின் சிறந்த கெடிகாரமாகும். புவியியல் வரலாற்றை பேணிகாக்க ஜிர்கான்களே சிறந்த கனிமமாகும்” என்றார் மற்றொரு ஆய்வாளர் மெக்கீகன். ஆதிபுவி தீய்யாவுடன் நேருக்கு நேர் மோதியதன் மூலம் திரவ வடிவ சந்திரன் உருவாகி பிறகு திடமாகியுள்ளது. உருவாக்க ஆரம்ப தருணங்களில் சந்திரனின் மேற்புறம் மேக்மாவால் மூடப்பட்டிருந்தது. இந்த மேக்மா கடல் கொஞ்சம் கொஞ்சமாக குளிர்ந்து சந்திரனின் மையப்பகுதியும் மேல் ஓடும் உருவாகியிருக்கலாம்.

இந்த ஆய்வு ‘சயன்ஸ் அட்வான்சஸ்’ என்ற இதழில் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x