Published : 29 Dec 2013 12:00 AM
Last Updated : 29 Dec 2013 12:00 AM

இராக்கில் சன்னி முஸ்லிம் எம்.பி. கைது: தடுக்க முயன்ற 6 பேர் சுட்டுக்கொலை

இராக்கில் சன்னி முஸ்லிம் எம்.பி. அகமது அல் அல்வானி நேற்று கைது செய்யப்பட்டார். முன்னதாக அவர் கைது செய்யப்படுவதை தடுக்க முயன்ற அவரது சகோதரர் மற்றும் 5 பாதுகாவலர்கள், இராக் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இராக்கில் பிரதமர் நூரி அல் மாலிகி தலைமையிலான, ஷியா முஸ்லிம் பெரும்பான்மை அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவு அளித்து வந்தார் அல்வானி. இந்நிலையில் நேற்று காலை, பாக்தாத் நகரின் மேற்கில் உள்ள ரமடி நகரின் மையப்பகுதியில் உள்ள அல்வானியின் வீட்டை பாதுகாப்பு படையினர் சூழ்ந்துகொண்டனர். அல்வானியை கைது செய்ய முயன்றபோது, அவரது பாதுகாவலர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அல்வானியின் சகோதரர் மற்றும் 5 பாதுகாவலர்கள் கொல்லப்பட்டனர். 8 பேர் காயமடைந்தனர். மேலும் பாதுகாப்பு படை தரப்பில் 10 பேர் காயமடைந்தனர்.

கொல்லப்பட்டவர்களில், சன்னி முஸ்லிம் அமைப்பு ஒன்றின் உறுப்பினரான, அல்வானியின் சகோதரியும் அடங்குவார் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அல்வானி கைது செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. என்றாலும் அவர் பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இராக்கில் சன்னி முஸ்லிம்கள் வஞ்சிக்கப்படுவதாகக் கூறி, ரமடி நகருக்கு அருகில் நெடுஞ்சாலை ஒன்றில் போராட்டக்காரர்கள் போக்குவரத்து தடையை ஏற்படுத்தியுள்ளனர். இந்தப் போராட்டத்துக்கு அல்வானி ஆதரவு அளித்து வந்தார்.

இந்த முற்றுகை அல்காய்தா பயங்கரவாதிகளுக்கு சாதக மாக அமையும் என்பதால் போராட்டத்தை உடனே கைவிட வேண்டும் என பிரதமர் நூரி அல் மாலிகி எச்சரித்து வந்தார். இந்நிலையில் அல்வானி கைது செய்யப்பட்டுள்ளார்.

இராக்கில் ஷியா, சன்னி முஸ்லிம்கள் இடையிலான மோதலில் இந்த ஆண்டில் இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x