

கலிபோர்னியா மாகாண ஆளுநர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக அமெரிக்க இந்தியரான நீல் கேஷ்கரி அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய ஆளுநர் ஜெர்ரி பிரௌன் மீண்டும் போட்டியிடுகிறார்.
நீல் கேஷ்கரியின் பெற்றோர் காஷ்மீரிலிருந்து கடந்த 1960-ம் ஆண்டுகளில் அமெரிக்காவுக்குக் குடியேறினர். 40 வயதாகும் நீல் கேஷ்கரி கடந்த 2006-ம் ஆண்டு ஜார்ஜ் புஷ் அரசாங்கத்தில் கருவூலத்துறை உதவி செயலாளராகப் பணி யாற்றினார்.
கடந்த 2008-ம் ஆண்டு அமெரிக் காவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது, அதிலிருந்து நாட்டை மீட்க நிதிக்கொள்கைகளை வகுப்பதில் முக்கியப் பங்காற்றினார். ஆளுநர் பதவிக்குப் போட்டியிடுவது குறித்து நீல் கேஷ்கரி கூறுகையில், “லட்சக்கணக்கான கலிபோர்னிய மக்களுக்கு நல்ல கல்வியும், வேலைவாய்ப்பும் எட்டாக்கனியாக உள்ளது. குழந்தைகளுக்கு நல்ல கல்வியும், படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பும் அளிப்பதற்காக இத்தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். இதுதான் என் களம்” என்றார்.
நீல் கேஷ்கரி ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டால், ஆளுநராகப் பதவியேற்கும் மூன்றாவது இந்திய வம்சாவளி அமெரிக்கராக அவர் இருப்பார். முன்னதாக, லூசியானா மாகாண ஆளுநராக பாபி ஜின்டால், தெற்கு கலிபோர்னியா ஆளுநராக நிக்கி ஹேலியும் பதவி வகித்தனர். இம்மூவருமே, குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.