

ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள இந்திய கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட சற்று குறைந்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 55-ல் இருந்து 56 ஆக அதிகரித்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி, உருக்கு துறையில் முன்னணியில் உள்ள லட்சுமி மிட்டல், எஸ்ஸார் குழுமத்தின் சசி ரூயா, ரவி ரூயா சகோதரர்கள் ஆகியோர் இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முன்னணியில் உள்ளனர். ஆனால் அவர்களது சொத்து மதிப்பு குறைந்துள்ளது.
இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவு, டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது போன்ற காரணங் களால் இந்திய கோடீஸ்வரர்களின் பண மதிப்பு குறைந்துள்ளது. போர்ப்ஸ் பத்திரிகை இத் தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த 55 பேர் சர்வதேச பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்தனர். இந்த ஆண்டு கூடுதலாக ஒருவர் இணைந்துள்ளார். போர்ப்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்தியாவின் முன்னணி கோடீஸ்வரர்களின் நிகர சொத்து மதிப்பு சுமார் 12 லட்சம் கோடி யாகும். கடந்த ஆண்டு இது சுமார் 12.5 லட்சம் கோடியாக இருந்தது.
சர்வதேச அளவில் பெரும் கோடீஸ்வரர்கள் அதிகரித்துள்ளனர். ஏற்கெனவே கோடீஸ்வரர் களாக உள்ளவர்களின் சொத்து மதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் 1,645 பெரும் செல்வந்தர்கள் உள்ளார்கள். இந்த ஆண்டில் மட்டும் 268 புதிய பெரும் பணக்காரர்கள் உரு வாகியுள்ளனர். 42 பெண்களும் இந்த ஆண்டு இப்பட்டியலில் புதிதாக இடம் பிடித்துள்ளனர்.
அமெரிக்காவில்தான் மிக அதிகபட்சமாக 492 பெரும் பணக்காரர்கள் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக சீனாவில் 152 பேரும் ரஷ்யாவில் 111 பேரும் உள்ளனர். உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் பில் கேட்ஸ் முதலிடத்தில் உள்ளார். முகேஷ் அம்பானி 40-வது இடத்தில் உள்ளார். லட்சுமி மிட்டல் 52-வது இடம் பெற்றுள்ளார். 2008-ம் ஆண்டில் முகேஷ் அம்பானி 5-வது இடத்தில் இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
முதல் முறையாக அல்ஜீரியா, லிதுவேனியா, தான்சானியா, உகாண்டா ஆகிய நாடுகளில் இருந்து சிலர் போர்ப்ஸ் பத்திரிகையின் கோடீஸ் வரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவைச் சேர்ந்த அலிகோ டான்கோட் முதல்முறையாக முன் னணியான 25 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.