

எபோலா நோய்க்கு சியேரா லியோனில் ஒரே நாளில் 121 பேர் பாதிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் இடையே அச்சம் நிலவுகிறது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் பரவிய எபோலா தொற்று நோய், பின்னர் கினியா, சியேரா லியோன், லைபீரியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் வேகமாக பரவியது. கடந்த சில மாதங்களில் இந்த நோய் பிற நாடுகளுக்கு பரவ தொடங்கி சர்வதேச அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
எபோலா பாதிப்பு லைபீரியாவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், மேலும் அதிர்ச்சி தரும் விதமாக சியேரா லியோனில் ஒரே நாளில் 121 பேருக்கு எபோலா பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் அங்கு 557 பேர் எபோலாவால் பாதிப்பட்ட நிலையில், அவர்களது எண்ணிக்கை 678 ஆக அதிகரித்துள்ளது. இந்த நோய்க்கு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 3,400-ஐ தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.