

இந்திய அரசியல் தலைவர்களிடம் இருந்து ஹிலாரி கிளிண்டன் நிதியுதவி பெற்றுள்ளார் என்று டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரியும் குடியரசு கட்சி தரப்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இருவரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.
ஹிலாரி கிளிண்டனை குற்றம் சாட்டி 35 பக்கங்கள் கொண்ட அறிக்கையை டிரம்ப் வெளியிட் டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 2008-ம் ஆண்டில் இந்திய அரசியல் தலைவர் அமர் சிங், கிளிண்டன் அறக்கட்டளைக்கு ரூ.33.94 கோடி நிதியுதவி அளித்துள்ளார். இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தத் தொகை வழங்கப்பட்டது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக ஹிலாரி பணியாற்றியபோது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் பெர்னாண்டோ என்பவர் அமெரிக்க சர்வதேச பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றார். இதற்காக ரவி பெர்னாண்டோ, கிளிண்டன் அறக்கட்டளைக்கு சுமார் ரூ.34 கோடி நிதியுதவி அளித்தார்.
ஹிலாரியின் தவறான வெளியுறவு கொள்கைகளால் ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் வலுப்பெற்றது. இதனால் ஆயிரக் கணக்கான அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரம் கோடி பண இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்தபோது சமாஜ்வாதி மூத்த தலைவர் அமர்சிங் அமெரிக்கா வில் முகாமிட்டு பேரம் நடத்திய தாக டிரம்ப் ஏற்கெனவே குற்றம் சாட்டியுள்ளார். அந்த விவகாரத்தை தற்போது அவர் மீண்டும் எழுப்பியுள்ளார்.