

இன்று பலவகையான பல்புகள் பயன்பாட்டுக்கு வந்து விட்டன. குண்டு பல்பால் மின்சக்தி அதிகம் செலவாகிறது என்று அதை கைவிடுகிற காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். பழைய உலகில் தீபங்களும் தீவட்டிகளும் மெழுகுவத்திகளும் ஆதிக்கம் செலுத்தின. அந்த உலகில் குண்டுபல்பு தான் விஞ் ஞானத்தின் ஒளிவிளக்காய் உயர்ந்தது. அதை இந்த நாளில் தான் விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் பொது மக்களுக்கு போட்டு காட்டினார்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள மென்லோ பார்க் அருகே தனது கண்டுபிடிப்பு தொழிற்சாலையை எடிசன் அமைத்து இருந்தார். அதன் அருகே உள்ள ஒரு தெருவில் குண்டுபல்புகள் கொண்ட மின்விளக்கு கம்பங்களை அமைத்து பொதுமக்களுக்கான கண்காட்சியாக ஒரு சோதனையை நடத்தி னார். அதை பற்றி கேள்விப்பட்ட மக்கள் ஆயிரக்கணக்கில் கூடியதால் அவர்களுக்கான சிறப்பு ரயில்கள் விடப்பட்டன.
மின்விளக்குகளுக்கான மாதிரிகளை பலபேர் கண்டு பிடித்தாலும், நடைமுறையில் பயன்படக்கூடியதாக எடிசன்தான் அதனை உருவாக்கினார். மின்சக்தியால் நின்று எரியக்கூடிய பல பொருள்களை அவர் சோதனைசெய்தார். கார்பன் தொடர்புடைய ஒரு பொருள் நீண்ட நேரம் எரிந்து ஒளி தந்தது.
எடிசனின் கண்டு பிடிப்புகளில் அவர் மின்துறையில் செய்தது மிகவும் முக்கியமானது. மின்விநியோகத்துக்கான முழுமையான ஒரு அமைப்பை அவர் உருவாக்கினார். உலகின் முதல் மின்நிலையத்தையும் அவர் நியூயார்க் மாநிலத்தில் அமைத்தார். பேட்டரியையும் அவர் கண்டுபிடித்தார்.
முதல் மின்சார ரயில் பாதையையும் அவர்தான் அமைத்தார். 1,093 கண்டுபிடிப்புகளுக்கான உரிமைகளை பெற்ற அவர் 84-வது வயதில் இறந்தார்.