

நான் மார்க்சியவாதி அல்ல என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இத்தாலியிலிருந்து வெளியாகும் ‘லா ஸ்டாம்பா’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது:
மார்க்சிய சித்தாந்தம் தவறானது. அதே சமயம், மார்க்சிய சித்தாந்தத்தை கடைப்பிடிக்கும் நல்ல மனிதர்களை எனது வாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன். அதனால் அவர்கள் மீது எனக்கு எந்தவிதமான வெறுப்பும் இல்லை.
தற்போதுள்ள உலகப் பொருளாதார அமைப்பால் ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளதை கண்டித்து கருத்து தெரிவித்தேன். அது வல்லுநரின் பார்வையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட கருத்து அல்ல. கத்தோலிக்க திருச்சபையின் சமூகக் கோட்பாடுகளுக்கு உட்பட்டே அந்தக் கருத்தைத் தெரிவித்தேன்.
அத்தகைய கருத்தை தெரிவித்ததால் என்னை மார்க்சிஸ்ட் எனக் கருதக்கூடாது” என்றார்.
கடந்த மாதம் போப் பிரான்சிஸ் வெளியிட்ட செய்தியில், நியாயமற்ற பொருளாதாரக் கொள்கைகளும், முறைப்படுத்தப்படாத முதலாளித்துவமும் அராஜகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார். ஆர்ஜென்டினாவில் ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலைக்கு பின்னர் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.
இதை அமெரிக்காவைச் சேர்ந்த பழமைவாதிகள் கடுமையாக விமர்சித்திருந்தனர். அதைத் தொடர்ந்து இப்போது போப் விளக்கம் அளித்துள்ளார்.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி சிந்தனைகள் சார்ந்த முற்போக்கு இறைமை யியல் இயக்கத்தினரின் செயல்பாடு களுக்கு எதிராக போப் விமர்சனம் செய்து வந்தார். சமீபத்தில்தான் அந்த இயக்கத்தினருடன் சுமூகமான உறவை மேம்படுத்த முயற்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.