Last Updated : 05 Aug, 2016 04:39 PM

 

Published : 05 Aug 2016 04:39 PM
Last Updated : 05 Aug 2016 04:39 PM

பாகிஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் அதிருப்தி: அமெரிக்காவின் நிதியுதவி நிறுத்திவைப்பு

ஹக்கானி தீவிரவாத வலைப்பின்னலுக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கை போதுமானதாக இல்லை என்ற காரணத்தினால் அமெரிக்கா, பாகிஸ்தானுக்கான 300 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவியை நிறுத்தி வைத்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சர்வதேச பாதுகாப்புத் திட்டத்தின் நிபுணர்கள் குழுவில் உள்ள முன்னாள் வெள்ளை மாளிகை அதிகாரி, ஷமீலா சவுத்ரி கூறும்போது, “பாகிஸ்தானுக்கு இதுகாறும் அளித்து வந்த ‘பிளாங்க் செக்’ அணுகுமுறை, அதாவது பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா அளித்து வரும் நிதியுதவிகள், இனி பிரச்சினைதான், அமெரிக்க செனட் சபையினரின் ஆதரவை பாகிஸ்தான் இழந்து வருகிறது. காரணம், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் ஹக்கானி வலைப்பின்னலுக்கு எதிராக பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

மாறும் உறவுகள்:

பாகிஸ்தானுக்கான கூட்டணி ஆதரவு நிதியின் ஒரு பகுதியை ஒபாமா நிர்வாகம் நிறுத்தி வைத்ததான முடிவு அமெரிக்க-பாகிஸ்தான் உறவுகளிடையே ஏற்பட்டு வரும் மாற்றத்தை அறிவுறுத்துவதாக உள்ளது.

அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ஆஷ்டன் கார்ட்டர், ஹக்கானி வலைப்பின்னலுக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கைக்கு தேவையான சான்றிதழ் அளிக்க மறுத்ததால் பெண்டகன் 300 மில்லியன் டாலர்கள் நிதியுதவியை நிறுத்தி வைத்துள்ளது என்று சவுத்ரி தெரிவித்தார்.

ஆனால் இது பாகிஸ்தான் அமெரிக்க உறவுகளில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டதற்கான அறிகுறி அல்ல என்று கூறிய சவுத்ரி, “பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளிடையே இருதரப்பு ஈடுபாடுகள் உள்ளன. குறிப்பாக ஆப்கானில் அரசியல் தீர்வு ஏற்பட பாகிஸ்தான் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று அமெரிக்கா கருதுகிறது. எனவே உறவுகளில் சில விஷயங்கள் இருதரப்பினருக்கும் சமமாக உள்ளது இதனை பாதுகாப்பதும் முக்கியம்” என்றார்.

ஹக்கானி நெட்வொர்க்கிற்கு எதிராக பாகிஸ்தானின் செயலின்மையைக் கண்டிக்கும் நடவடிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளதுதான் என்று பிரபல தெற்காசிய நிபுணர் லிசா கர்டிஸ் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, “9/11 தாக்குதலிலிருந்து 15 ஆண்டுகள் தலிபானை வளர்ப்பது என்ற தனது கொள்கையிலும் ஹக்கானி வலைப்பின்னலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை என்ற கொள்கையிலும் பாகிஸ்தான் உறுதியாக இருந்து வருகிறது. இப்போது இத்தகைய சேதம் விளைவிக்கும் கொள்கையினால் நிதியுதவியில் ஒரு பகுதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.

அதாவது பாகிஸ்தான் தனது உறுதி மொழிகளை காக்கத் தவறியதால் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இயல்பான முன்னேற்றமே என்கிறார் வாஷிங்டன் நிபுணர் அபர்ணா பாண்டே கூறுகிறார்.

அவர் மேலும் கூறும்போது, “கடந்த சில பத்தாண்டுகளாக பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமெரிக்காவின் நிதி மற்றும் ராணுவ உதவிகளைக் கோரி பெற்று வந்துள்ளது. முன்பு சந்தேகத்தின் பலனை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வந்தது, ஆனால் இனி அது போன்ற சாதகம் சாத்தியமாவது கடினம்” என்றார்.

ஹக்கானி வலைப்பின்னல்தான் 58 உயிர்களைப் பறித்த காபூல் தாக்குதலுக்கு முக்கியக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x