

இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே வழக்கில் நடந்தது என்ன என்பது குறித்து அமெரிக்க அரசு மறுஆய்வு செய்து வருகிறது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே, வாஷிங்டனில் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:
தேவயானி கைது சம்பவம் தொடர்பாக அமெரிக்க வெளியு றவு அமைச்சர் ஜான் கெர்ரி இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனை தொலை பேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது நடந்த சம்பவத்துக்காக கெர்ரி வருத்தம் தெரிவித்தார்.
துணைத் தூதர் தேவயானி வழக்கில் நடந்தது என்ன என்பது குறித்து நாங்கள் இப்போது மறு ஆய்வு நடத்தி வருகிறோம். இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.
இந்தியாவில் உள்ள அமெ ரிக்கத் தூதரகங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கும்படி இந்திய தரப்பிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.
அமெரிக்காவுக்கும் இந்தியா வுக்கும் இடையே ஆழமான நட்பு உள்ளது. தேவயானி வழக்கு தனிப்பட்ட சம்பவம். இதனால் இரு நாட்டு உறவு பாதிக்கப்படக் கூடாது.
வருங்காலத்தில் இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்ப டுத்துவோம்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சரே இந்திய அதிகாரியை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இரு நாட்டு உறவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்ப தைப் புரிந்து கொள்ளலாம் என்றார்.
இந்திய தூதரகம் விளக்கம்
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பணிப் பெண் சங்கீதா மாயமானது குறித்து அமெரிக்கத் தூதரகத்தில் கடந்த ஜூன் முதல் பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. பணிப் பெண் தரப்பில் துணைத் தூதர் தேவயானிக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் குறித்தும் புகார் அளிக்கப் பட்டது.
இதுதொடர்பாக இந்திய வெளியு றவு அமைச்சகம் சார்பில் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திடம் கடந்த ஜூனில் விரிவான தகவல் தெரிவிக்கப்பட்டது.
பலமுறை புகார் அளிக்கப்பட்ட பின்னர் கடந்த செப்டம்பர் 4-ம் தேதி அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் பதில் கடிதம் அனுப்பியது.
அந்தக் கடிதம் பணிப்பெண் சங்கீதாவுக்கு மட்டுமே ஆதரவாக இருந்தது.
ஊதிய விவகாரம் தொடர்பாக சங்கீதா அளித்த புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது என்று கடிதத்தில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது என்று இந்திய தூதரக அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஆணவம்
இந்தியத் தூதரக வட்டாரங்கள் கூறியதாவது: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி வருத்தம் மட்டுமே தெரிவித்துள்ளார். இந்தியத் தூதரை கைவிலங்கிட்டு அவரது ஆடைகளை களைந்து சோதனை நடத்தியதற்காக மன்னிப்பு கோரவில்லை.
அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர், அவருடைய மனைவி ஆகியோர் மீது அண்மையில் இதேபோன்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அந்த வழக்கு தொடர்பாக ரஷ்ய தூதர் கைது செய்யப்படவும் இல்லை. அவரிடம் எவ்வித விசாரணையும் நடத்தப்படவும் இல்லை.
தூதர் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்தது. ஆனால் இப்போது இந்திய துணைத் தூதர் தேவயானியைக் கைது செய்து அவரை மோசமாக நடத்தியுள்ளனர் என்று இந்திய தூதரக வட்டாரங்கள் குற்றம் சாட்டியுள்ளன.