

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரின்போது சரணடைந்தவர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா உறுதி அளித்துள்ளார்.
ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே சுமார் 30 ஆண்டுகளாக நீடித்த போர் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. இதில் விடுதலைப்புலிகள் தோல்வி அடைந்தனர்.
இந்த இறுதிக்கட்டப் போரின்போது சுமார் 40 ஆயிரம் தமிழர்களை ராணுவம் கொன்றுவிட்டதாக ஐ.நா. புள்ளி விவரம் கூறுகிறது. மேலும் பலர் சரணடைந்தனர் அல்லது பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் போர் முடிந்து 8 ஆண்டுகள் முடிந்த நிலையிலும் கைதானவர்களின் கதி என்ன ஆனது என தெரியவில்லை. இந்நிலையில், இறுதிக்கட்டப் போரில் காணாமல் போன அல்லது சரணடைந்தவர்களை விடுவிக்குமாறு அவர்களது உறவினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் தங்கள் கோரிக்கைக்கு பலன் கிடைக்காத காரணத்தால், தமிழர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் கடந்த மே 30-ம் தேதி 100 நாட்களை எட்டியது. இதையடுத்து, வடகிழக்கு பகுதிக்குட்பட்ட 8 மாவட்டங்களில் காணாமல் போனவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் அதிபர் சிறிசேனாவை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த சந்திப்பின்போது, காணாமல் போனவர்களின் பிரதி நிதிகள் 5 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிபர் சிறிசேனாவிடம் வழங்கினர். அதில், சரணடைந்தவர்கள் பட்டி யலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் அடங்கும். இதுகுறித்து, தமிழ் சமூகத் தினரின் செய்தித் தொடர்பாளர் கே.குருபரன் கூறும்போது, “தமிழர்களின் கோரிக்கையை அதிபரிடம் வாசித்துக் காட்டி னோம். அப்போது, உள்நாட்டுப் போரின்போது சரணடைந்தவர் கள், கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் பட்டியலை வழங்குமாறு தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு உத்தரவிடப்படும் என்று அதிபர் மைத்ரிபால சிறிசேனா உறுதி அளித்தார்” என்றார்.