

பஞ்சாபில் உள்ள பொற்கோயிலில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீதான இந்திய ராணுவத்தின் ‘புளூ ஸ்டார்’ நடவடிக்கையில் பிரிட்டனுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று பிரதமர் டேவிட் கேமரூன் தெரி வித்துள்ளார்.
சமீபத்தில் பிரிட்டன் அரசின் ரகசிய ஆவணங்கள் பொது மக்களின் பார்வைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி வெளியிடப்பட்டது. அதில், 1984-ம் ஆண்டு பிரிட்டனின் சிறப்பு விமானச் சேவைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி, இந்தியாவுக்குச் சென்றதாகவும், பொற்கோயிலில் ராணுவ நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை வழங்கியதாகவும் கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பாக சர்ச்சை எழுந்ததை அடுத்து, விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சரவைச் செயலாளருக்கு பிரதமர் கேமரூன் உத்தரவிட்டார். அதன்படி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை யில், ‘புளு ஸ்டார்’ சம்பவத்தில் பிரிட்டன் அரசுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரிட்டனில் உள்ள சீக்கிய சமூகத்தைச் சேர்ந் தோருக்கு வீடியோ மூலம் டேவிட் கேமரூன், செவ்வாய்க்கிழமை இரவு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: “1984-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பில் இருந்த மார்கரெட் தாட்சர் தலைமையிலான அரசு, ‘புளு ஸ்டார்’ நடவடிக்கையில் சம்பந்தப்பட்டிருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. 200 -க்கும் மேற்பட்ட அரசு கோப்பு களையும், 23 ஆயிரத்துக்கும் மேற் பட்ட ஆவணங்களையும் ஆய்வு செய்துள்ளோம். அதில், எந்த தகவலும் இடம்பெறவில்லை.
இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க பிரிட்டன் ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரி, சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். ஆனால், அவரின் ஆலோசனைகளை இந்தியா செயல்படுத்தவில்லை. இந்தியா தனது திட்டத்தின்படியே செயல் பட்டது. எனவே, இந்த சம்பவத்தில் பிரிட்டன் அரசுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை.
பிரிட்டன் நாட்டுக்கு சிறந்த சேவையாற்றி வரும் சீக்கிய சமூகத்தினரை நான் என்றைக்கும் மறக்கமாட்டேன். அவர்களுக்கு எப்போதும் நன்றி உடையவனாயிருப்பேன்” என்றார்.