

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது கடும் குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளதோடு, அதற்காக ஷெரீப் மீது வழக்கத் தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளது.
ஊழல் விவகாரத்தில் ஷெரீப் சிக்கியுள்ள நிலையில் அவர் ராஜினாமாவைக் கோரியுள்ளார் இம்ரான் கான்.
இந்நிலையில் இம்ரான் கட்சியின் செய்தித் தொடர்பாலர் ஃபவாத் சவுத்ரி நேற்று கூறும்போது, “அயல்நாட்டு நபர் ஒருவரிடமிருந்து நிதி திரட்டி பாகிஸ்தான் ஜனநாயகத்துக்கு ஊறு விளைவிக்கும் செயலில் நவாஸ் ஷெரீப் ஈடுபட்டக் குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதி கேட்கப் போகிறோம்” என்றார்.
முன்னாள் ஐஎஸ்ஐ உளவாளி காலித் கவாஜாவின் மனைவி ஷமாமா காலித் வெளியிட்டுள்ள புத்தகமான “காலித் கவஜா: ஷாஹீத் இ அமான்” என்ற புத்தகத்தில் வந்துள்ள சில நேர்காணல்களைத் தவிர இந்தக் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் இல்லை என்றாலும் வழக்கு தொடர அனுமதி கோருவது உறுதி என்கிறது இம்ரான் கட்சி. காலித் கவாஜா தாலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
1980-களின் இறுதியிலிருந்தே நாட்டின் அரசியல் வரலாற்றின் நிழலான சில நிகழ்வுகளை அம்பலப்படுத்தப் போவதாக இம்ரான் கட்சி உறுதி பூண்டுள்ளதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மேலும் அந்தப் புத்தகத்தில், காஷ்மீரிலும், ஆப்கானிலும் ஜிஹாத்தை வளர்க்க நவாஸ் ஷெரீப் அல்குவைதா தலைவர், ஒசாமா பின்லேடனிடமிருந்து ரூ.1.5 பில்லியன் நிதியுதவி பெற்றதாக பல்வேறு நேர்காணல்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதை இம்ரான் கான் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் அதே நூலில், இந்தத் தொகையில் ரூ.270 மில்லியன் தொகை 1989-ம் ஆண்டு பூட்டோவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
2013-ம் ஆண்டு இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த மசூத் ஷரீப் கான் கட்டக், இவர் முன்னாள் உளவுத்துறை இயக்குநரும் கூட, இவர் கூறும்போது உளவுத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை 1989-ம் ஆண்டு மோசடி செய்ததாகவும் உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். அதாவது பூட்டோவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதன் பின்னணியில் முன்னாள் அதிபர் குலாம் இஷாக் கான் மற்றும் முன்னாள் ராணுவ தளபதி மிர்சா அஸ்லம் பெய்க் ஆகியோரு இருந்ததாகவும் கட்டக் குறிப்பிட்டுள்ளார்.
இம்ரான் கான் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறும்போது, ”மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக கடந்த காலங்களில் நவாஸ் ஷெரீப் சதிவேலைகளில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது” என்றார்.
எனவே இரண்டு வழக்குகள் நவாஸ் ஷெரீப் மீது இந்த வாரத்தில் தொடுக்கப்படவுள்ளது .