

முழுமையான நிர்வாகச் சுதந்திரம் கோரி, சீன அரசுக்கு எதிராக ஹாங்காங்கில் மாணவர் அமைப்பினர் மற்றும் பொது மக்கள் நடத்தும் போராட்டம் வலுப்பெற்றுள்ளது. மாணவர் அமைப்பினருடன் ஹாங்காங் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளது. இதனிடையே, போராட்டக்காரர்களுக்கும் அரசு ஆதரவாளர்களுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
பிரிட்டன் காலனியாதிக்கத்திலிருந்த ஹாங்காங், சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் கடந்த 1997-ம் ஆண்டு வந்தது. ஹாங்காங் நகரம் தலைமை நிர்வாக அதிகாரியின் ஆட்சியதிகாரத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. ஹாங்காங்கில் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பல ஆண்டுகளாகவே மக்கள் போராட்டம் நடத்தி வந்தாலும் கடந்த சில மாதங்களாக இப்போராட்டம் வலுப்பெற்றுள்ளது. தேர்தலுக்கு சீன அரசு ஒப்புக் கொண்டாலும், தேர்தலில் போட்டியிடுபவர்களை சீன அரசு நியமிக்கும் குழுதான் தேர்வு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சீன அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு, சாலைகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.
ராஜினாமா கோரிக்கை
தலைமை நிர்வாக அதிகாரி, லியுங் சுன் யிங் ராஜினாமா செய்ய வேண் டும் என மாணவர் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை சி லியங் ஏற்க மறுத்து விட்டார்.
கைகலப்பு
இதனிடையே, நேற்று போராட்டக்காரர்களுக்கும் சீன அரசு ஆதரவாளர்களுக்கும் இடையே திடீர் மோதல் வெடித்தது. மோதலைத் தடுக்க மிகக் குறைந்த போலீஸாரே அங்கு இருந்தனர். போராட்டக்காரர்கள் வைத்திருந்த தடுப்புகளை, அரசு ஆதரவாளர்கள் அகற்றியதே பிரச்சினைக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இம்மோதலில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது குறித்து உடனடித் தகவல்கள் இல்லை. போராட்டக்காரர்கள் மீது, மக்களில் ஒரு பகுதியினர் அதிருப்தியடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேச்சுவார்த்தை
ராஜினாமா செய்ய மறுத்துள்ள தலைமை நிர்வாக அதிகாரி, லியுங் சுன் யிங், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிரதான மாணவர் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, தலைமை நிர்வாகச் செயலாளரை நியமித்துள்ளார். இது தொடர்பாக லியுங் கூறும்போது, “தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் நான் ராஜினாமா செய்ய முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
ஹாங்காங் மாணவர் கூட்டமைப்பினருடன் (எச்கேஎப்எஸ்)), தலைமை நிர்வாகச் செயலர் கேரி லாம் தலைமையிலான அரசு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இருப்பினும் வெள்ளிக்கிழமை மாலை வரை பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான அறிகுறிகள் இல்லை. ஹாங்காங் போராட்டத்தை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.