தீவிரவாத அச்சுறுத்தல்களை முறியடித்து புத்தாண்டில் ஜொலித்த உலகம்

தீவிரவாத அச்சுறுத்தல்களை முறியடித்து புத்தாண்டில் ஜொலித்த உலகம்
Updated on
1 min read

தீவிரவாத அச்சுறுத்தல்களை முறியடித்து உலகம் முழுவதும் புத்தாண்டு பிறப்பு நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட் டது.

கடந்த நவம்பர் 13-ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 132 பேர் உயிரிழந்தனர். 350 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள், அமெரிக் காவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதை யடுத்து அந்த நாடுகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டன.

குறிப்பாக பெல்ஜியம் தலை நகர் பிரஸ்ஸல்ஸ், பிரிட்டிஷ் தலைநகர் லண்டன், அமெரிக் காவின் நியூயார்க் நகரங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது. இதனால் அந்த நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்ட விழாக் களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கோலாகலம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் 1904-ம் ஆண்டு முதல் புத்தாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு புத்தாண்டு விழாவும் நேற்று உற்சாகத்தோடு கொண்டாடப் பட்டது. அங்கு லட்சக்கணக் கானோர் திரண்டிருந்து புத்தாண்டை வரவேற்றனர்.

பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் 12 ஆயிரம் வண்ண வாணவேடிக் கைகள் நிகழ்த்தப்பட்டன. சுமார் ஒரு லட்சம் பேர் லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் திரண்டிருந்தனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பலத்த பாதுகாப்புடன் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் பாரீஸ் நகர வீதிகள், தெருக்களில் திரண்டி ருந்து பரஸ்பரம் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் புத்தாண்டு பிறந்தபோது ஒரு நிமிடம் மவுனம் கடைப்பிடிக்கப்பட்டது. அடுத்த 5 நிமிடங்களில் வாணவேடிக் கைகளால் வானம் ஜொலித்தது.

ஜெர்மனியின் பெர்லின், சீனத் தலைநகர் பெய்ஜிங், நியூசிலாந்தின் ஆக்லாந்து நகர், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர், தைவானின் தைபே நகர், மலேசிய தலைநகர் கோலாலம்பூர், தாய்லாந்து தலைநகர் பாங்காக் உட்பட உலகம் முழுவதும் நேற்று புத்தாண்டு பிறப்பு கொண்டாட்டம் களை கட்டியது.

முனிச், துபையில் சோகம்

ஜெர்மனியின் முனிச் நகரில் புத்தாண்டின்போது ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது. இதை யடுத்து அங்கு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இரண்டு ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.

பொதுஇடங்களில் மக்கள் கூட வேண்டாம் என்று போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அந்த நகரில் புத்தாண்டு கொண் டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

துபையில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வாண வேடிக்கைகள் நிகழ்த் தப்பட்டன. இதில் அங்குள்ள ஒரு ஓட்டலின் 20-வது மாடியில் மிகப் பெரிய தீ விபத்து நேரிட்டது. உடனடியாக தீ அணைக்கப் பட்டுவிட்டது. எனினும் இந்த விபத்தில் 16 பேர் காயமடைந்தனர். இந்த தீ விபத்தால் அங்கு புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in