Published : 22 Oct 2014 11:06 AM
Last Updated : 22 Oct 2014 11:06 AM

உலக மசாலா - 57 வயது பெண்மணி குடித்த 2 பாட்டில் வோட்கா

இத்தாலியைச் சேர்ந்த லூசியா பிட்டாலிஸ் என்ற பெண், பிரபலமான ஆண்கள், பெண்களைப் போல மேக் அப் செய்து பிரமாதப்படுத்துகிறார். 43 வயதான லூசியா, மர்லன் மண்ட்ரோ, வால்டர் ஒயிட், ராம்போ, ராக்கி, கெய்த் ரிச்சர்ட்ஸ் என்று பிரபலங்களைப் போல மேக் அப் செய்து கொண்டு கலக்குகிறார்.

‘நான் யாரைப் போல மேக் அப் செய்துகொள்ளப் போகிறேனோ, அவர்களைப் பற்றிப் படிப்பேன், திரைப்படங்களைப் பார்ப்பேன், புகைப்படங்களைச் சேகரித்து வைப்பேன். பிறகு அந்த உருவத்துக்கு ஏற்றவாறு என் முகத்தை எப்படி மாற்றலாம் என்று யோசிப்பேன். அவர்கள் தொடர்பான பின்னணி இசையைக் கேட்பேன். என்னுடைய மூளை தயார் ஆனவுடன், கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு, மேக் அப் போட ஆரம்பித்துவிடுவேன்’ என்கிறார்.

தசாவதாரம் படம் பாத்தீங்களா லூசியா?

சீனாவில் வசிக்கும் 57 வயது ஷேன் ஐலன் என்ற பெண், இரண்டு பாட்டில் வோட்காவைக் குடித்துவிட்டார். தலை சுற்றவும் குளிக்கலாம் என்று நினைத்து, ஆற்றில் குதித்தார். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர், கண் திறந்து பார்த்த போது 75 கி.மீ. தொலைவைக் கடந்து வந்திருந்தார். அருகில் உள்ள கிராமத்தினர் ஷேனைக் காப்பாற்றினார்கள். ஏராளமான பாலங்கள், படகுகள், கப்பல்களை எல்லாம் கடந்து வந்திருந்தாலும் ஷேனுக்குப் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. 10 மணி நேர மயக்கத்துக்குப் பிறகுதான் நினைவு வந்து, தன்னைக் காப்பாற்றும்படி கூறியிருக்கிறார் ஷேன். காப்பாறியவர்களிடம், ‘இனி நான் ஆல்கஹால் பக்கம் தலை வைத்துக்கூட படுக்க மாட்டேன்’ என்று கூறியிருக்கிறார் ஷேன்.

பட்டால் தானே புத்தி வருது!

ஜெர்மனில் குடி மற்றும் போதையில் விழுந்து கிடைக்கும் மனிதர்களை மீட்பதற்காக ’பிக்-அப்’ என்ற பிராஜக்ட் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குடி மகன்களை மீட்டு, தெருவைச் சுத்தம் செய்ய வேண்டும் என்பதுதான் இந்த பிராஜக்டின் நோக்கம். இந்தச் சேவைக்காக வேலை இல்லாத இளைஞர்களுக்குச் சிறிது பணமும், கொஞ்சம் பீரும் வழங்குகிறார்கள். பிக்-அப் திட்டம் எதிர்பார்த்ததை விட அமோக வரவேற்பு பெற்றிருக்கிறது. குடியிலிருந்து மீட்பவர்களுக்கு பீர் கொடுப்பது நியாயமா என்று கேட்பவர்களுக்கு, ’சிறிதளவே கொடுக்கிறோம். இதன் மூலம் யாரும் அடிமையாகிவிட முடியாது’ என்று விளக்கமும் கொடுக்கிறார் இந்த பிராஜக்ட் ஒருங்கிணைப்பாளர் ஆலிவர் பல்கர்.

முள்ளை முள்ளால் எடுக்கிறார்களோ?

ஜப்பானின் பாப்டெய்ல் பூனையை வைத்து உருவாக்கப்பட்டது ஹலோ கிட்டி என்ற கார்ட்டூன். யோகோ ஷிமிஸு என்ற பெண்மணி உருவாக்கிய ஹலோ கிட்டிக்கு, இந்த ஆண்டு 40 வயதாகிறது. இதனைக் கொண்டாடும் விதத்தில் புதிய வடிவம் எடுக்கிறது ஹலோ கிட்டி. முதல் முறை பணப் பையில் ஹலோ கிட்டியின் உருவம் பொறிக்கப்பட்டு, விற்பனைக்கு வந்தது. கடந்த நாற்பது ஆண்டுகளில் உணவு டப்பாக்கள், புத்தகப் பைகள், வண்ணம் தீட்டும் புத்தகங்கள், விளையாட்டுகள் என்று ஏராளமான விதங்களில் ஹலோ கிட்டி இடம்பெற்று, எல்லோரையும் கொள்ளைகொண்டுவிட்டது!

ஹேப்பி பர்த்டே கிட்டி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x