Published : 16 Sep 2016 10:18 AM
Last Updated : 16 Sep 2016 10:18 AM

உலக மசாலா: கொடூர டால்பின் வேட்டை!

ஜப்பானின் மிகப் பிரபலமான டால்பின் வேட்டை டைஜியில் நடத்தப்படுகிறது. இங்குள்ள மலைக் குகைப் பகுதியில் நூற்றுக்கணக்கான டால்பின்கள் தினமும் வேட்டையாடப்படுகின்றன. செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை 6 மாதங்கள் டால்பின் வேட்டை தொடர்கிறது. ஒவ்வொரு பருவத்துக்கும் 2 ஆயிரம் டால்பின்கள் கொல்லப்படுகின்றன. அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பே மோட்டார் படகுகளில் மலைக் குகைக்கு வந்து, வலை விரித்து காத்திருக்கிறார்கள். இடப்பெயற்சி செய்யும் டால்பின்கள் கூட்டமாக அந்தப் பகுதியைக் கடக்க முயலும்போது, வலையால் தடுக்கப்பட்டு, மீனவர்களின் ஈட்டிகளுக்குப் பலியாகின்றன. கூர்மையான உலோகக் கம்பிகளை வைத்து, டால்பின் உடலில் பலமுறை குத்துகிறார்கள்.

அந்தப் பகுதி நீரே சிவப்பாக மாறிவிடுகிறது. இப்படிச் செய்வதால் டால்பின்களின் உளவியல் பாதிக்கப்படுகிறது என்கிறார்கள். குட்டிகளையும் இளம் டால்பின்களையும் கொல்லாமல் விட்டுவிட்டாலும் அவை மன அழுத்தத்தில் விரைவில் மரணத்தைச் சந்தித்துவிடுகின்றன. ஏனென்றால் டால்பின்கள் கூட்டமாக வசிக்கக்கூடியவை. மிக அன்பாகப் பழகக்கூடியவை. கண் முன்னே தங்கள் உறவினர்கள் கொல்லப்படும் காட்சியைப் பார்க்கும் டால்பின்கள், மனிதர்களைப் போலவே துன்பமடைகின்றன. டைஜி டால்பின் வேட்டையை லூயி பிசியோஸ் ஆவணப்படமாக எடுத்து வெளியிட்டார்.

அதற்குப் பிறகு உலகம் முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. விலங்குகள் நல ஆர்வலர்களும் வேட்டையைத் தடுக்கப் போராடினர். ஆனாலும் தடுக்க இயலவில்லை. பல கோடி பணம் புழங்கும் தொழிலாக மாறிவிட்டதும் ஜப்பானிய அரசாங்கம் ஆதரவு அளிப்பதும்தான் இதற்குக் காரணம். உடலுக்குத் தீங்கிழைக்கும் ரசாயனங்கள் கலக்கப்பட்ட டால்பின் இறைச்சியைச் சாப்பிட வேண்டாம் என்று தொடர்ந்து செய்துவந்த விழிப்புணர்வு மூலம், ஜப்பானிய மக்களிடம் டால்பின் இறைச்சிக்கான ஆர்வம் குறைந்து வருகிறது. ஆனால் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டைஜி டால்பின் இறைச்சிகளை வாங்கத் தயாராக இருக்கிறார்கள்.

இந்தக் காலத்திலும் இப்படி ஒரு கொடூர வேட்டை…

சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் இயங்கும் உயர்நிலைப் பள்ளிகளில் முடி வெட்டுவதற்காக ஆட்களை நியமித்திருக்கிறார்கள். முடிகளை நீளமாக வளர்ப்பது, விதவிதமாகச் சுருட்டிக்கொள்வது, வண்ணங்கள் தீட்டிக்கொள்வது என்று பள்ளி மாணவர்கள் முடி அலங்காரத்தில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறார்கள். பள்ளியின் கட்டுப்பாடுகளை இவர்கள் கண்டுகொள்வதில்லை. இவர்களுக்காகவே முடிதிருத்துபவர்களை நியமித்திருக்கிறார்கள். பள்ளி நுழை வாயிலிலேயே முடியை வெட்டி, அனுப்பி விடுகிறார்கள். ‘அலங்காரத்தில் அக்கறை எடுக்கக்கூடிய பருவம். பெரும்பாலான நேரத்தை அதற்கே செலவிடுகிறார்கள். அதைப் பற்றியே சிந்திக்கிறார்கள். அதனால்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டிய அவசியமில்லை. படிப்பு முடித்த பிறகு இவர்கள் தங்கள் விருப்பம் போலதான் இருக்கப் போகிறார்கள்’ என்கிறது பள்ளி நிர்வாகம்.

ம்... பள்ளி செய்யும் வேலையா இது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x