ஒபாமா, மன்மோகனுடன் அமெரிக்க அழகி விருந்து?
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அளிக்கவுள்ள விருந்தில் பங்கேற்க அமெரிக்க அழகி நினா தவுலுரிக்கு, அதிபர் பராக் ஒபாமா அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வ பயணமாக அமெரிக்கா செல்லும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, வரும் 27 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் விருந்து அளிக்கிறார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. இந்த விருந்தில் பங்கேற்க அமெரிக்க அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நினா தவுலுரிக்கும் அழைப்பு விடுக்கப்படும் என நம்புவதாக, தெற்காசிய விவகாரங்களுக்கான முன்னாள் துணைச் செயலாளர் கார்ல் இன்டர்ஃபர்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: அமெரிக்க அழகியாக முடிசூடிய முதல் இந்திய வம்சாவளி அமெரிக்கர் நினா. அவரை விருந்துக்கு அழைப்பது, இந்திய-அமெரிக்க மக்களுக்கிடையே உறவை மேம்படுத்துவதன் அடையாளமாக இருக்கும். எனவே, நினாவுக்கு விருந்தில் பங்கேற்க ஒபாமா அழைப்பு விடுப்பார் என நம்புகிறேன்.
இந்திய வம்சாவளி அமெரிக்கர் கள், அமெரிக்காவுக்கு ஏராளமான பங்களிப்பைச் செய்து வருகின்றனர் என்றார் அவர்.
மொய்க்கும் இந்திய ஊடகங்கள்:
நினா தவுலுரியிடம் பேட்டி எடுப்பதற்காக முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்திய ஊடகங்களில் இருந்து நேரம் கேட்டு ஏராளமான அழைப்புகள் வந்துள்ளது என, அமெரிக்க அழகிக்கான போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அமெரிக்க அழகிப் போட்டி சந்தை ஒருங்கிணைப்பாளர் எரிக்கா ஃபியோக்கோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நினா துவுலுரியிடம் பேட்டி கேட்டு, இந்திய ஊடகங்களிடம் இருந்து மிக அதிக அழைப்புகள் வந்துள்ளன. இதுவரை எந்த அமெரிக்க அழகிக்கும் இப்படி ஒரு வாய்ப்பு வந்ததில்லை. இந்திய வம்சாவளி அமெரிக்கர், அமெரிக்க அழகிப் பட்டம் வென்றதன் மூலம் இப்போட்டி தேசிய அளவில் இருந்து சர்வதேச முக்கியத்துவம் மிக்கதாக மாறியிருக்கிறது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருக்கிறோம்.
இந்திய ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பதற்காக, நினாவின் இந்தியப் பயணத்தை திட்டமிட்டுள்ளோம். இந்திய ஊடகங்கள், பேட்டிக்கான நேரம் கேட்டு தொடர்ந்து தொலைபேசியில் அழைத்தபடியே உள்ளனர். ஏனெனில் அவர் இந்தியாவில் முன்னுதாரமான பெண்ணாகி விட்டார் என்றார் அவர்.
