Published : 07 Oct 2014 09:56 AM
Last Updated : 07 Oct 2014 09:56 AM

உலக மசாலா: பூனைக்கு ரத்த தானம் செய்த நாய்

ஆலன் ஸ்பென்சர் சமீபத்தில் பிரிட்டனின் ஃப்ரீஸ்டைல் மீசை சாம்பியனானார். அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் உலக மீசை சாம்பியன் போட்டியில் பங்கேற்பதற்காகத் தயாராகி வருகிறார். 61 வயது ஆலன், 16 வயதிலிருந்து மீசை வளர்த்து வருகிறார். மீசை இரண்டு பக்கங்களிலும் மூன்று விதமாகப் பிரிக்கப்பட்டு, வெவ்வேறு வடிவங்களுடன் காட்சியளிக்கிறது. தன்னுடைய சுமாரான முகத்தை பாதிக்கும் மேல் மறைத்து, தன்னை அழகாக காட்டுகிறது மீசை என்கிறார் ஆலன். இந்த மீசை போட்டியில் பங்கேற்பவர்கள் மாதம் ஒருமுறை கூடி, தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

மீசை மேல எவ்வளவு ஆசை!

நார்வேயைச் சேர்ந்த கன்னர் கர்ஃபோர்ஸ், டே யங் பாக், ஒய்விந் ட்ஜுப்விக் நண்பர்கள் மூவரும் 24 மணி நேரத்தில் 19 நாடுகளைச் சுற்றி வந்துள்ளனர்! கின்னஸ் சாதனைக்காக இந்த முயற்சியில் இவர்கள் இறங்கியிருந்தனர். கிரீஸில் நள்ளிரவு கிளம்பியவர்கள், பல்கேரியா, மாசிடோனியா, கொசாவா, செர்பியா, ஆஸ்திரியா, ஹங்கேரி, ஸ்லோவாகியா, ஜெர்மனி, நெதர்லாந்து என்று 19 நாடுகளைச் சுற்றி வந்துவிட்டனர். நிர்ணயித்த நேரத்துக்கு 20 நிமிடங்களுக்கு முன்பாகவே சாதனையை நிகழ்த்திவிட்டனர். 2012ல் 17 நாடுகளைச் சுற்றி வந்த சாதனையை முறியடித்துள்ளனர். தொடர்ந்து 24 மணி நேரம் பயணம் செய்தும் கொஞ்சமும் சோர்வடையாத இவர்கள், அடுத்து 48 மணி நேரத்தில் ஏராளமான நாடுகளைச் சுற்றி வரத் திட்டமிட்டிருக்கிறார்கள்!

ஊர் சுத்துனாலும் உபயோகமா சுத்தனும்ங்கறது இதுதான்!

பிரிட்டனில் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சியில் 40 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆங்கில வார்த்தைகளுக்குச் சரியான ஸ்பெல்லிங் சொல்லச் சிரமப்படுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. 2,000 பெரியவர்களை இந்த ஸ்பெல்லிங் பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். இதில் கலந்துகொண்டவர்களில் பாதிப் பேர் மற்றவர்களின் ஸ்பெல்லிங் மிக மோசமாக இருப்பதாகச் சொன்னார்கள். கால்வாசிப் பேர், சில வார்த்தைகளுக்கு ஸ்பெல்லிங் சொல்வது மிகவும் கடினமாக இருப்பதாக ஒப்புக்கொண்டனர். Embarrassment முதல் Government வரை 50 வார்த்தைகள் கடினமானவை என்று இவர்கள் மூலம் தெரியவந்திருக்கிறது.

தமிழ்நாட்டுல பீட்டர் விடுறவங்ககிட்ட இப்படி ஒரு சோதனையை நடத்தணும்!

மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த பூனைக்கு அவசரமாக ரத்தம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. ரத்தம் கிடைக்கவில்லை. நாயின் ரத்தத்தை எடுத்து, பூனைக்கு ஏற்றினார்கள். மிக மிக அரிதாகத்தான் இப்படி வேறு இன உயிரின ரத்தத்தை இன்னோர் உயிரினத்துக்கு ஏற்றுவார்கள். நாயின் ரத்தம் ஏற்றப்பட்ட பூனை உயிர் பிழைத்துக்கொண்டது. இப்படி உயிர் பிழைப்பதும் அரிதான நிகழ்வுதான் என்கிறார் கால்நடை மருத்துவர் சீன் பெர்ரி.

அந்த நாயும் பூனையும் இனி ரத்த பந்தங்களாகி விடுமோ!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x