இராக்கில் ஷியா முஸ்லிம்களை குறிவைத்து மனித வெடிகுண்டு தாக்குதல்: 47 பேர் சாவு
இராக் தலைநகர் பாக்தாத் அருகே ஷியா பிரிவு முஸ்லிம்களை குறிவைத்து சன்னி பிரிவு பயங்கரவாதிகள் நடத்திய மனித வெடி குண்டு தாக்குதலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 30 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 65 பேர் படுகாயமடைந்தனர்.
பலத்த பாதுகாப்பையும் மீறி மனித வெடிகுண்டு பயங்கரவாதி ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டுள்ளான். புனித நகரமான கர்பாலாவிலும் ஷியா பிரிவினரைக் குறி வைத்து வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. இதில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
முஹரம் மாதத்தின் ஆஷுரா புனித தினமான வியாழக்கிழமை ஷியா முஸ்லிம்களைக் குறிவைத்து அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. ஹப்ரியா நகரில் ஷியா பிரிவு யாத்ரீகர்கள் முகாம் அமைத்து தங்கியிருந்த இடத்தில் இரட்டை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர் சுமார் 100 பேர் காயமடைந்தனர்.
இதே பகுதியில் மற்றொரு இடத்தில் வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த 3 குண்டு வெடிப்புகளில் 8 பேர் உயிரிழந்தனர். கிர்குக் நகரில் கார் குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். முகமது நபியின் பேரன் ஹுசைன் கர்பாலாவில் நடைபெற்ற சண்டையில் கொல்லப் பட்டதன் நினைவாக முஹரம் அனுசரிக்கப்படுகிறது. சன்னி, ஷியா முஸ்லிம்களிடையே பெரும் பிளவை ஏற்படுத்திய முக்கிய நிகழ்வு இது.
