Last Updated : 24 Oct, 2014 10:05 AM

 

Published : 24 Oct 2014 10:05 AM
Last Updated : 24 Oct 2014 10:05 AM

நீதிமன்ற நடவடிக்கையில் இருந்து தப்பிக்க 2 ஆண்டுகளாக கோமாவில் இருப்பதுபோன்று நடித்தவர் போலீஸிடம் பிடிபட்டார்

நீதிமன்ற நடவடிக்கையில் இருந்து தப்பிக்க இரண்டு ஆண்டுகளாக கோமாவில் சுயநினைவின்றி இருப்பதாக நடித்தவர் போலீஸிடம் பிடிபட்டுள்ளார்.

பிரிட்டனின் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஆலன் நைட் (47). இவர் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அண்டை வீட்டுக்காரரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.38 லட்சத்தை முறைகேடாக அபகரித்துக் கொண்டதாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக போலீஸார் அவரைக் கைது செய்தனர். இந்த வழக்கு உள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஜாமீனில் வெளிவந்த ஆலன் நைட் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாக அவரது மனைவி ஹெலன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதற்கு ஆதாரமாக வீட்டில் அவர் மருத்துவ உபகரணங்களுடன் சுயநினைவின்றி படுத்திருக்கும் புகைப்படத்தையும் மருத்துவ சான்றிதழ்களையும் அளித்தார். இதனை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டாலும் போலீஸார் நம்பவில்லை. அவர்கள் நடத்திய ரகசிய விசாரணையில் ஆலன் நைட் ஆரோக்கியமாக நடமாடுவது தெரியவந்தது.

அண்மையில் அவர் வெளியில் நடமாடியது சிசிடிவி கேமராவில் பதிவானது. அந்த வீடியோ ஆதாரத்தை போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது ஆலன் நைட் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவர் மீதான வழக்கில் நவம்பர் 7-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x