அரபு நாடுகள் - கத்தார் பிளவால் எண்ணெய், சமையல் எரிவாயு விலை உயருமா?

அரபு நாடுகள் - கத்தார் பிளவால் எண்ணெய், சமையல் எரிவாயு விலை உயருமா?
Updated on
2 min read

அரபு நாடுகளுக்கும், கத்தாருக்கும் இடையிலான உறவு துண்டிப்பால் எண்ணெய் விலை உயரக்கூடும். இது எல்என்ஜி கேஸ் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

'இஸ்லாமியக் குழுக்களுக்கு ஆதரவு தெரிவித்து, தீவிரவாதத்தை வளர்க்கிறது' என்று கூறி கத்தாருடனான தங்கள் ராஜாங்க உறவைத் துண்டித்துக் கொள்வதாக சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 அரபு நாடுகளும் அறிவித்துள்ளன.

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள சவுதி, ''அரபு நாடுகளின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த கத்தார் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருகிறது. அந்நாடு ஐஎஸ்ஐஎஸ், அல்-கொய்தா இயக்கங்களுக்கு உதவுகிறது'' என்று கூறியுள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயரும்

இந்த நிலைப்பாட்டால் உடனடியாக எண்ணெய் ஏற்றுமதி உடனடியாகப் பாதிக்காவிட்டாலும், வருங்காலத்தில் விலை 1 சதவீதம் அதிகரித்து, ஒரு பேரலின் விலை 50 டாலர்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் சங்க உறுப்பினர் நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகியவை சமீபத்தில் கச்சா எண்ணெய் உற்பத்திக் குறைப்பை நீக்க முடிவெடுத்தன. இதன்மூலம் சந்தையை இறுக்கி, விலையை அதிகப்படுத்தவும் அவை திட்டமிட்டிருந்தன.

அதே நேரத்தில் அரசியல் நெருக்கடிகள் எப்படி பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் சங்கத்தின் கொள்கை உருவாக்கத்தைப் பாதிக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. உலகத்தின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியாதான் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் சங்கத்தின் நடைமுறைத் தலைவராக இருக்கிறது.

எல்என்ஜி கேஸ் மீதான தாக்கம்

கத்தார் மீதான தடை காரணமாக எல்என்ஜி ஏற்றுமதியில் பாதிப்பு இருக்குமா என்று உடனடியாகக் கருத்துக் கூற முடியாது என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

எல்என்ஜி கேஸ் ஏற்றுமதியில் உலகளாவிய அளவில் கத்தார் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. அங்கிருந்துதான் எகிப்து தன் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்கிறது. ஜனவரி 2016-ல் இருந்து ஒவ்வொரு மாதமும் 8,57,000 கியூபிக் மீட்டர்கள் எல்என்ஜி கேஸ் கத்தாரில் இருந்து எகிப்துக்குச் செல்கிறது.

அதேபோல கத்தாரில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஜனவரி 2016-ல் இருந்து ஒவ்வொரு மாதமும் 1,90,000 கியூபிக் மீட்டர்கள் எல்என்ஜி கேஸ் செல்கிறது.

அதேபோல குவைத்துக்கும் 2016-ல் இருந்து ஒவ்வொரு மாதமும் 2,83,000 கியூபிக் மீட்டர்கள் எல்என்ஜி கேஸ் கத்தாரில் இருந்துதான் செல்கிறது.

ஆசிய நாடுகளுக்கு பாதிப்பில்லை

அதே நேரத்தில் அரசியல் மாறுபாடுகள் காரணமாக எல்என்ஜி கேஸ் இறக்குமதியில் ஆசிய நாடுகள் பாதிக்கப்படாது என்று கூறப்படுகிறது.

இதுகுறித்துப் பேசிய இந்திய எல்என்ஜி இறக்குமதி நிதிய தலைவர் ஆர்.கே.கார்க், ''கத்தார், அரபு நாடுகள் இடையேயான பிரச்சினை நம்மை பாதிக்காது. நாம் கடல் வழியாக நேரடியாகக் கத்தாரிடம் இருந்தே எல்என்ஜி கேஸைப் பெறுகிறோம்'' என்றார்.

கத்தாரிடமிருந்து எல்என்ஜி கேஸ் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in