Published : 27 Oct 2013 08:50 AM
Last Updated : 27 Oct 2013 08:50 AM

கல்வியில் அமெரிக்காவை முந்துகிறது இந்தியா: ஒபாமா அதிர்ச்சி

கணிதம், தொழில்நுட்பத் துறை தொடர்பான கல்வியில் அமெரிக்கர்களை முந்தும் அளவுக்கு இந்தியர்களும், சீனர்களும் கடுமையான உழைப்பை வெளிப்படுத்துகின்றனர். உலகமயச் சூழலில் வேலை வாய்ப்புகள் எந்த நாட்டுக்கும் செல்ல வாய்ப்புள்ளது. எனவே, அதை எதிர்கொள்ள அமெரிக்கக் கல்வித் துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.



புரூக்ளினில் உள்ள கல்வி நிலையம் ஒன்றில் ஒபாமா வெள்ளிக்கிழமை பேசியதாவது: முந்தைய தலைமுறைகளில் எந்தவிதமான போட்டியுமின்றி பொருளாதாரத்துறையில் நாம் வலுவாக இருந்தோம். இப்போது லட்சக்கணக்கான திறமைசாலிகள் பெய்ஜிங், பெங்களூர், மாஸ்கோவி லிருந்து உருவாகி வருகின்றனர். அவர்களுடன் நீங்கள் (அமெரிக்கர்கள்) நேரடியாக போட்டியிட வேண்டிய நிலை உள்ளது.

அந்த நாடுகள் கல்வித்துறையில் நம்மை முந்திவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கணிதம், அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் அவர்கள் நம்மை பின்னுக்குத் தள்ளிவிட்டனர். நாம் இப்போது 21-ம் நூற்றாண்டு உலகமயமாக்கச் சூழலில் வாழ்கிறோம்.

இன்றைய சூழலில் வேலைவாய்ப்புகள் உலகின் எந்த நாடுகளிலும் குவியலாம். கல்வியில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற வர்களுக்குத்தான், நிறுவனங்கள் வேலையை வழங்குகின்றன.

எனவே, சூழலுக்கேற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். கடுமையாக உழைத்து, கல்வித் துறையில் முன்னேற வேண்டும். உயர் கல்விக்கான கட்டணம் அதிகமாக உள்ளது. மாணவர்களும் பெற்றோர்களும் கல்விக் கடன் சுமையில் அவதிப்படுகின்றனர். கட்டணத்தை குறைக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக சில மாதங்களுக்கு முன்பு, கட்டணக் குறைப்பு தொடர்பான யோசனையை முன்வைத்தேன். கல்வி, அறிவியல் ஆராய்ச்சி, கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் வகையில், பொறுப்புடன் பட்ஜெட்டை தயாரிக்க வேண்டும்" என்றார் ஒபாமா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x