

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்களைப் பற்றிய விவரங்களை வெளியிடக் கோரி அவர்களது உறவினர்கள் 4-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் விடுதலைப்புலி களுக்கும் ராணுவத்துக்கும் இடை யிலான போர் கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அப்போது நடந்த இறுதிக்கட்ட போரில் சுமார் 65 ஆயிரம் தமிழர்கள் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. ராணுவத்தில் சரணடைந்தவர்களும் இதில் அடக்கம்.
இதற்கு ராணுவம், போலீஸ், கடற்படை ஆகியவையே காரணம் என்றும், காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை அரசு வெளியிட வேண்டும் என்றும் அவர்களது உறவினர்கள் கோரி வருகின்றனர்.
இதையடுத்து, இந்த விவகாரத்தை கவனிப்பதற்காக ஒரு அலுவலகம் அமைக்க, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில், காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை வெளியிட வலியுறுத்தி வவுனியாவில் கடந்த திங்கள்கிழமை முதல் அவர்களது உறவினர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 4-வது நாளாக நேற்றும் இந்தப் போராட்டம் தொடர்ந்தது. இதில் 4 பெண்களின் நிலை மோசமடைந்துள்ளது.
இந்தப் போராட்டம் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நாடாளுமன்றத்தில் கூறும்போது, “காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. அவர்களது உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்” என்றார்.