Last Updated : 29 Jan, 2014 11:48 AM

 

Published : 29 Jan 2014 11:48 AM
Last Updated : 29 Jan 2014 11:48 AM

பழிபோடு படலம்

இனக்குழு விரோதம் காலம்காலமாக இருந்து வருவதுதான். தேசிய அடையாள மோதலுக்கு கோர்ப்பசேவ் காலத்துக்குப் பிறகு என்றைக்குமே குறைச்சல் இருந்ததில்லை. ஆனால் மதத்தைக் குறிப்பிட்டு, ‘அபாயம், கவனம்' என்று ரஷ்யாவில் யாரும் இதுவரை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்ததில்லை. முதல் முறையாக இப்போது அப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. மாஸ்கோ நகரத்தில் வசிக்கும் முஸ்லிம்கள் பலத்த அதிர்ச்சியடைந்து, கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

என்ன விவகாரம்?

மாநில, மாவட்ட, நகர கவுன்சில்களின் அதிகாரபூர்வ இணையத் தளங்களில் சமீபத்தில் ‘தீவிரவாதிகளை அடையாளம் காண்பது' குறித்த சில தந்திரோபாயங்கள் வெளியிடப்பட்டன.

நன்றாக உற்றுப் பாருங்கள். அவர்களை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்தி அறிவது சுலபம். எப்படியென்றால் சாதாரண பொதுமக்களைக் காட்டிலும் அவர்கள் மசூதிகளில் பக்தி மேலோங்கி, பரவசமாகி நிற்பார்கள், தொழுவார்கள். எல்லோரும் சும்மா தொழுகிறார்களா? இவர்கள் அதனை ஒரு தியானம் போலச் செய்வார்கள்.

தவிரவும் தொழுகை நேரத்துக்கு அப்பாலும் அவர்களை நீங்கள் மசூதி வளாகத்தில் பார்க்கலாம். தீவிரவாதிகள் தமக்குள் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளவும் பேசிக்கொள்ளவும் தகவல் பரிமாறிக்கொள்ளவும் மசூதிகளை ஒரு மையக் கேந்திரமாகப் பயன்படுத்துவது எளிது. இரவு நேரத்தில் தங்கிக்கொள்ளவும் வாகான இடம். யாருக்கும் சந்தேகம் எழாமல் தங்கள் காரியங்களைப் பார்த்துக்கொள்ள இதனைக் காட்டிலும் அவர்களுக்குச் சிறந்த மறைவிடம் வேறில்லை.

இவ்வாறாகத் தொடங்கி, தீவிரவாதிகளை இனம் காண நாட்டு மக்களுக்கு உபதேசம் செய்யும் திருப்பணியில் அரசாங்கம் இறங்கியிருப்பது ரஷ்ய முஸ்லிம்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற் படுத்தியிருக்கிறது. அதுவும் தீவிரவாதத் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவும் உளவு அமைப்புகளும் இணைந்து இந்த ரகப் பரிந்துரைகளை அளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதெல்லாம் வடிகட்டிய பொய்; அரசு அபாண்டம் பேசுகிறது என்கிறது முஸ்லிம்கள் தரப்பு. மாஸ்கோ நகரத்தில் எந்த ஒரு மசூதியும் இரவுப் பொழுதில் திறந்திருப்பதில்லை. தொழுகை நேரமல்லாத பொழுதுகளில் யாருக்கும் அனுமதி அளிக்கப்படுவது மில்லை. தவிரவும் ஒவ்வொரு மசூதியிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது அந்தந்தப் பிராந்தியத்தின் காவல் துறை அதிகாரிகளுக்கே தெரியும்.

நடமாட்டங்கள் வெளிப்படையானவை. இது, சிறுபான்மையினரைக் குறித்த அச்சத்தைப் பொதுமக்களிடையே விதைத்து அவர்களைத் தனிமைப்படுத்தச் செய்யப்படும் கீழ்த்தர உத்தி மட்டுமே என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.

ஒலிம்பிக் ஜுரம் சூடு பிடித்திருக்கும் நேரத்தில் ரஷ்யா முழுதும் செச்னியத் தீவிரவாதிகளைத் தேடி நாக்கு தள்ள அலைந்துகொண்டிருக்கிறது காவல்துறை. எப்போது எங்கே குண்டு வெடிக்குமென்று யாருக்கும் தெரியாது. எப்படியும் சோச்சி ஒலிம்பிக்ஸை நடக்கவிடாமல் நாறடித்தே தீருவோம் என்று அவர்களும் தம் பங்குக்கு வரிந்து கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் உள்ளூர் முஸ்லிம் மக்களின் ஆதரவு அவர்களுக் குச் சற்றும் கிடைத்துவிடக்கூடாது என்று புதின் கருதுகிறார். ரஷ்யாவில் வசிக்கும் செச்னியர்களைக் குறிப்பிட்டு மேற்படி அறிவிப்பு வெளியாகியிருக்குமானால்கூட இந்தளவுக்குக் கொந்த ளிப்பு இருந்திருக்காது. ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினரையும் மொத்தமாக இழுத்து நிறுத்திக் குற்றம் சாட்டுவது போல இதென்ன அயோக்கியத்தனம் என்று முஸ்லிம் அமைப்புகள் வீதிக்கு வந்திருக்கின்றன.

இதற்கிடையில், சொற்களில் பிழை இருக்கலாம்; ஆனால் சொல்ல வந்த விஷயம் அர்த்தமற்றதல்ல என்று மத அமைப்பு களுக்கான கட்டுப்பாட்டு அமைப்பு (தூமா கமிஷன்) கருத்துத் தெரிவித்திருப்பதும் பிரச்சினையாக்கப்பட்டிருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் இந்த ஒலிம்பிக்ஸ் நடந்து முடிவதற்குள் ரஷ்யா ஒரு வழியாகிவிடும் போலத்தான் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x