

செவ்வாய்கிரகத்தின் நீர்ம வடிவில் தண்ணீர் இருப்பதற் கான தடயங்களை நாசா கண்டறிந்துள்ளது.
செவ்வாய் சுற்றுப்பாதையில் நாசா செலுத்தியுள்ள தகவல் சேகரிப்பு ஆய்வுக் கலம் மற்றும் ஒடிஸி ஆய்வுக்கலம் இரண்டும் இதுதொடர்பான தகவல்களைச் சேகரித்து அனுப்பியுள்ளன.
கருமையான விரல் வடிவ தழும்புகளை இந்த விண்வெளி ஆய்வுக்கலங்கள் படம்பிடித்து அனுப்பியுள்ளன. சில செவ்வாய் சரிவுப் பகுதிகளில் வெப்பநிலை உயரும்போது இவை காணக் கிடைக்கின்றன. மேலும் பருவகால மாறுபாடுகளின்போது அங்குள்ள இரும்புத்தாதுகளிலும் மாற்றம் ஏற்படுவது தெரியவந்துள்ளது.
ஆர்எஸ்எல் எனப்படும் இவ்வாறான தொடர்சரிவுப் பகுதிகள் 13 இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள முதன்மை ஆய்வாளர் லுஜேந்திரா ஓஜா கூறுகையில், “ஆர்எஸ்எல் பகுதியில் நீர் வழிந்து செல்வதற்கான உறுதி யான ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், பெரிக் சல்பேட் போன்று இரும்புத் தாதுவில் உப்புக்கரைசல் படிந்திருக்கும் இச்செயல் எப்படி நீர் இன்றி நடைபெற்றிருக்க முடியும் என்பதை உறுதியாகக் கூறமுடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.