Published : 11 Feb 2014 11:09 AM
Last Updated : 11 Feb 2014 11:09 AM

ஆஸ்திரேலியாவில் தற்காலிக வேலை விசா: இந்தியர்கள் முதலிடம்

ஆஸ்திரேலியாவில் நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் முதல்நிலை எனப்படும் தற்காலிக வேலை (திறமையான) விசா பெற்றவர்கள் பட்டியலில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் வழங்கப்பட்ட விசா தொடர்பான புள்ளிவிவரங்களை அந்நாட்டு குடியேற்றத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

தற்காலிக வேலை விசா (சப்கிளாஸ் 457) பெற்றவர்கள் பட்டியலில் இந்தியர்கள் (23.4%) முதலிடம் பிடித்துள்ளனர். அடுத்தபடியாக பிரிட்டன்வாசிகள் (18.6%) மற்றும் அயர்லாந்துவாசிகள் (7.9%) முறையே 2-ம் மற்றும் 3-ம் இடங்களைப் பிடித்தனர். விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலிய தலைநகரம் மற்றும் டாஸ்மேனியா ஆகிய மண்டலங்களில் நியமன பணிகளின் கீழ் வழங்கப்பட்ட முதல்நிலை விசா விண்ணப்பங்கள் பட்டியலில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர்.

எனினும், தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் வடக்கு பிராந்தியம் ஆகிய இரண்டில் மட்டும் பிற நாட்டவர்கள் முதலிடத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவில் கடந்த டிசம்பர் வரையிலான காலத்தில் முதல்நிலை விசா பெற்றவர்களின் எண்ணிக்கை 90,780 ஆக இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தைவிட 8.3 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டு முதல்நிலை விசா பெற்றவர்கள் பட்டியலில் பிரிட்டன் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல்நிலை விசா வழங்கப்பட்ட துறைகளில் இதர சேவைகள் (14%), உறைவிடம் மற்றும் உணவு சேவைகள் (12.9%), தகவல் ஊடகம் மற்றும் தொலைத்தொடர்பு (10.2%) ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்தன.

வழங்கப்பட்டுள்ள மொத்த முதல்நிலை விசாக்களில் அதிகபட்சமாக சமையல் கலைஞர்களுக்கு (5.7 சதவீதம்) வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 4 சதவீதம் அதிகம். உணவக மேலாளர்கள் 4.4 சதவீதத்துடன் 2-ம் இடத்திலும், டெவலப்பர் புரோகிராமர் 3.1 சதவீதத்துடன் 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x