Published : 15 Oct 2013 03:54 PM
Last Updated : 15 Oct 2013 03:54 PM

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: பலி 85 ஆக அதிகரிப்பு

பிலிப்பைன்ஸில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. கட்டிடங்கள், வீடுகள் பெருத்த சேதமடைந்தன.

உள்ளூர் நேரப்படி காலை 8.12 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாகப் பதிவானது.

போஹோல் தீவின் கார்மென் நகரில் 33 கி.மீ. ஆழத்தில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்தனர். கார்மென் நகரில் சாலைகள் சேதமடைந்தன. பாலங்கள் இடிந்து விழுந்தன.

செபு நகரிலும் கடும் சேதம் ஏற்பட்டது. அங்கிருந்த சந்தைக் கட்டிடத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் பலர் காயமடைந்தனர். அந்நகரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் அரசு தரப்பில் நிதியுதவி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏராளமான பயனாளிகள் குழுமியிருந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், அனைவரும் ஒரே சமயத்தில் அங்கிருந்து வெளியேற முயன்றனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் கிழே விழுந்தனர். இச்சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர் என்று பேரிடர் மேலாண்மை அலுவலர் நீல் சான்செஸ் கூறினார்.

இதுவரை போஹோல் பகுதியில் 16 பேரும், செபு பகுதியில் 15 பேரும் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போஹோல் பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியரான வில்மா யோராங் கூறுகையில், “நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தேன். நில அதிர்வு அதிகமாக இருந்ததால், கிழே விழுந்துவிடாமல் இருக்க அங்கிருந்த மரம் ஒன்றை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டேன். பின்னர், சாலையில் வந்து பார்த்தபோது, ஏராளமானோர் காயமடைந்திருந்தனர்” என்றார்.

நிலநடுக்கத்துக்குப் பின் சுனாமி ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால், பலரும் மலையின் உச்சிக்குப் பகுதி ஓடிச்சென்றனர். ஆனால், நிலப்பகுதியில் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் சுனாமி ஏதும் ஏற்படவில்லை.

பிலிப்பைன்ஸில் கொண்டாடப்படும் முஸ்லிம் பண்டிகையான 'ஈத் அல்-அதா'வையொட்டி செவ்வாய்க்கிழமை விடுமுறை விடப்பட்டிருந்ததால், பள்ளி, அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் பலர் உயிர் தப்பினர்.

கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, இந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸின் நீக்ரோஸ் தீவு அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகுகளாகப் பதிவானது. அப்போது, கட்டிட இடிபாடுகளில் சிக்கி 100 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x