

திபெத் புத்த மத துறவி தலாய் லாமாவை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சந்திக்க இருக்கிறார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இருதரப்பு உறவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனது நாட்டின் ஒரு பகுதியாக திபெத்தை சீனா அறிவித்துள்ள நிலையில், திபெத்தை தனிநாடாக திபெத்தியர்களிடம் வழங்க வேண்டுமென்று தலாய் லாமா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுவே தலாய் லாமாவை ஒபாமா சந்திப்பதை சீனா எதிர்ப்பதற்கு முக்கியக் காரணமாகும்.
முன்னதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் கேத்தலீன் ஹேடன், ஒபாமா – தலாய் லாமா சந்திப்பு குறித்த அறிவிப்பை நேற்றுமுன்தினம் வெளியிட்டார். அப்போது சர்வதேச அளவில் மதத் தலைவராக கலாசார தலைவராகவும் மதிக்கப்படும் தலாய் லாமாவை அதிபர் ஒபாமா விரைவில் சந்திப்பார் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த சந்திப்புக்கு கடும் எதிர்ப்பை சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுயா சூன்யிங் கூறியிருப்பது:
அமெரிக்காவின் அறிவிப்பு சீனாவுக்கு பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். தலாய் லாமாவை அதிபர் ஒபாமா சந்திப்பது எங்களுக்கு எதிரான நடவடிக்கை என்றே கருகிறோம். இது இருதரப்பு உறவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
திபெத் விவகாரம் சீனாவின் உள்நாட்டுப் பிரச்சினை. இதில் வேறு எந்த நாடும் தலையிட முடியாது என்பதை இப்போது மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்திக் கொள்கிறோம் என்று அவர் கூறியுள்ளார். ஒபாமா, தலாய் லாமா இருவருமே அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்கள். இதற்கு முன்பு 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் இருவரும் சந்தித்துள்ளனர். அப்போதும் சீனா இதேபோன்று கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது.