Published : 16 Oct 2014 07:04 PM
Last Updated : 16 Oct 2014 07:04 PM

விடுதலைப்புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் ஐரோப்பிய யூனியன் சேர்த்தது தவறு: நீதிமன்றம்

விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ஐரோப்பிய யூனியன் சேர்த்தது தவறு என்று ஐரோப்பிய நீதிமன்றம் தனது தீர்ப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனின் முடிவை நீதிமன்றம் ரத்து செய்தபோதிலும், தற்போதைக்கு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கம் நீக்கப்படாது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006-ஆம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஒடுக்க வேண்டிய பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ஐரோப்பிய யூனியன் இணைத்தது.

ஐரோப்பிய யூனியனின் சட்ட விதிகளின்படி, ஆயுதம் ஏந்திய மோதல்களும், பயங்கரவாத நடவடிக்கையாக கருதப்படுவதால், அந்த இயக்கம் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டு, அதன் மீது தடை விதிக்கப்பட்டிருந்தது.

அந்தத் தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வந்த லக்ஸம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

'விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் ஐரோப்பிய யூனியன் சேர்த்ததில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் தவறானவை. இணையதளம் மற்றும் ஊடகச் செய்திகளை மட்டுமே கருத்தில்கொள்ளப்பட்டதே தவிர, விடுதலைப்புலிகள் குறித்து நேரடி விசாரணை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், அந்த இயக்கம் மீது விதிக்கப்பட்ட தடைக்கான முடிவு பொருத்தமற்றது.

மேலும், இந்தியாவில் விடுதலைப்புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதையொட்டி, அந்த இயக்கத்தை பயங்கரவாதப் பட்டியலில் ஐரோப்பிய யூனியன் சேர்த்ததும் முறையான நடவடிக்கை அல்ல.

எனவே, விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்குவதா, வைத்திருப்பதா என்பது குறித்து ஐரோப்பிய கவுன்சில் இரண்டு மாதங்களில் முடிவெடுக்க வேண்டும். அவ்வாறு முடிவு எடுக்கும் வரை, பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெயர் நீக்கப்படாது' என்பதே நீதிமன்ற உத்தரவின் முக்கிய அம்சங்கள் ஆகும்.

உள்நாட்டுப் போரில் ஆயுதம் தாங்கி போராடிய இயக்கமே தவிர, சர்வதேச சட்டங்களின்படி தமது அமைப்பை பயங்கரவாத நடவடிக்கைகளில் வரையறுக்க முடியாது என்ற விடுதலைப்புலிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஐரோப்பிய நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

அது தொடர்பாக கருத்து வெளியிட்ட ஐரோப்பிய நீதிமன்றம், விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பா என்பது குறித்து தம்மிடம் கருத்து எதுவும் இல்லை என்றும், ஐரோப்பிய யூனியன் சட்ட விதிகளின்படி, ஆயுதம் தாங்கிய போரில் ஈடுபடுவது என்பதே பயங்கரவாதம் என்ற வரையறைக்குள் வரக்கூடியதுதான் என்றும் குறிப்பிட்டுள்ளது.

எனினும், ஐரோப்பிய நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, தங்களது சட்ட ரீதியிலான முயற்சிக்கு கிடைத்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி என்று விடுதலைப்புலிகள் இயக்கம் சார்பில் வழக்கு தொடர்ந்த தமிழ் ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திக்கு உறுதுணை:ராய்ட்டர்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x