

பசிபிக் பெருங்கடலிலுள்ள பப்புவா நியூ கினியா நாட்டில் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற சிறைக் கைதிகள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலியாகினர்.
பசிபிக் பெருங்கடலின் தென் மேற்கு பகுதியிலுள்ள சிறிய நாடான பப்புவா நியூ கினியாவின் இரண்டாவது பெரிய நகரமான லே-வில் அமைந்துள்ள சிறைச்சாலையில் வெள்ளிக்கிழமையன்று சிறைச் சாலையின் சுற்றுச்சுவரை உடைத்து கைதிகள் தப்பிக்க முயற்சி செய்தனர்.
அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 கைதிகள் பலியாகினர். தப்பிச் சென்ற கைதிகளில் மூன்று பேர் பிடிப்பட்டனர். மேலும் தப்பிச் சென்ற 57 பேரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து லே நகர போலீஸார் கூறும்போது, "சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற பலர் கடுமையான குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றவர்கள். அவர்கள் சமூகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்கள்.
நாங்கள் அவர்களை எச்சரிக்கிறோம். அவர்களாக சரணடைவது அவர்களுக்கு நல்லது. இல்லையேல் விரைவில் கைது செய்யப்படுவார்கள்." என்று கூறியுள்ளனர்.
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இதே சிறைச்சாலையில் தப்பி செல்ல முயன்ற 100 கைதிகள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர். 17 பேர் காயமடைந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.