

பாகிஸ்தானில் கடந்த வாரம் காணாமல் போன இந்தியாவைச் சேர்ந்த 2 முஸ்லிம் மதகுருமார்கள், அந்நாட்டு உளவு அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் பகுதியில் உள்ள அவுலியா மசூதி யின் தலைமை இமாம் சையது ஆசிஃப் நிஜாமி (80). இவர் தனது உறவினர் நஜீம் அலி நிஜாமியுடன் தனது சகோதரியை பார்ப்பதற்காக கடந்த 8-ம் தேதி பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு சென்றார்.
பின்னர் 13-ம் தேதி லாகூருக்குச் சென்ற இவர்கள், பாக்பட்டன் பகுதியில் உள்ள சூபி துறவி பாபா பரிட் காங் வழிபாட்டுத் தலத்துக்கு சென்றனர். அதற்கு அடுத்த நாள் 14-ம் தேதி இருவரும் காணாமல் போயினர்.
இதையடுத்து, இருவரையும் பத்திரமாக மீட்டுத் தருமாறு பாகிஸ்தான் அரசுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், இந்த இருவரை யும் அழைத்துச் சென்ற பாகிஸ் தான் உளவு அமைப்பின் அதிகாரி கள், ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அல்டாப் ஹுசைன் தலைமை யிலான முத்தாகிதா காவ்மி இயக்கத் துடன் (எம்க்யூஎம்) தொடர்பு வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத் தின் பேரில் இந்த 2 மதகுருமார் களிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இல்லையெனில் விடுவிக்கப் படுவார்கள் எனத் தெரிகிறது.
எம்க்யூஎம் கடந்த 1980-களில் மிகப்பெரிய கட்சியாக உரு வெடுத்தது. பிரிவினைக்குப் பிறகு, இந்தியாவிலிருந்து பாகிஸ்தானில் தஞ்சமடைந்தவர்கள் அதிகம் வசிக்கும் சிந்து மாகாணத்தில் இந்தக் கட்சி ஆதிக்கம் செலுத்தியது. பின்னர் ஹுசைன் லண்டனில் தஞ்சமடைந்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு கராச்சியில் நடைபெற்ற உண்ணா விரதப் போராட்டத்தின்போது, காணொலி காட்சி மூலம் பேசிய அல்டாப் ஹுசைன் பாகிஸ் தானுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததாக குற்றம்சாட்டப்பட் டது. அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.