

பப்பர் கல்சா தீவிரவாத அமைப்புக்கு உதவியதாக பல்வீந்தர் சிங் (39) என்பவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் நவேடா மாகாணம் ரெனோ நகரில் வசித்து வரும் அவர், பப்பர் கல்சா இன்டர்நேஷனல், காலிஸ்தான் ஜிந்தாபாத் படை ஆகிய தீவிரவாத இயக்கங்களின் கிளை அமைப்பு களுக்கு பல்வேறு உதவிகளை செய்ததாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து இந்தியாவுக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தனி பஞ்சாப் நாட்டை வலியுறுத்தி வரும் பப்பர் கல்சா இன்டர்நேஷனல், காலிஸ்தான் ஜிந்தாபாத் படை அமைப்புகள் இந்தியாவுக்கு எதிரான நாச வேலைகளில் ஈடுபட சர்வதேச அளவில் நிதி திரட்டி வருகின்றன. அதற்கு பல்வீந்தர் சிங் உதவி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக எப்.பி.ஐ. போலீஸார் விசாரித்து பல்வீந்தர் சிங்கை கடந்த புதன்கிழமை கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.