

அணுசக்தி விநியோக குழுவில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பின ராவதற்கு ஆதரவு அளிக்கப்படும் என்று சுவிட்சர்லாந்து அதிபர் பிரதமர் மோடியிடம் உறுதி அளித்துள்ளார். கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு உதவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கன், கத்தார் நாடுகளில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் இரவு சுவிட்சர்லாந்து சென்றடைந்தார். ஜெனீவாவில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி நேற்று காலையில் அந்நாட்டு அதிபர் ஜோஹன் ஸ்க்னீடர் அம்மானை தனியாக சந்தித்துப் பேசினார். பின்னர் இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் பிரதிநிதிகள் குழுவினர் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அம்மான் கூறும்போது, “48 உறுப்பினர்களைக் கொண்ட அணுசக்தி விநியோகக் குழுவில் இணைய சுவிட்சர்லாந்து ஆதரவு அளிக்கும் என்று இந்தியா வுக்கு உறுதி அளித்துள்ளோம். மேலும் இந்தியர்கள் கருப்புப் பணத்தை சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யும் பிரச்சினைக்கு தீர்வு காண்பது, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறை களில் இணைந்து செயல்படுவது என்றும் ஒப்புக் கொண்டுள்ளோம்” என்றார்.
கருப்பு பண விவகாரம்
பின்னர் பிரதமர் மோடி கூறும்போது, “என்எஸ்ஜியில் உறுப்பினராவதற்கு ஆதரவு அளிக்கப்படும் என்று உறுதி அளித்த சுவிஸ் அதிபர் அம்மானுக்கு நன்றி. மேலும் உள்நாட்டில் வரி ஏய்ப்பு செய்து சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்துள்ளவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு ஏதுவாக, இது தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்து பேசினோம்” என்றார்.
இரு நாடுகளுக்கிடையே உள்ள பல்வேறு உறவுகள் பற்றி மோடி நினைவுகூர்ந்தார். குறிப்பாக, இந்திய திரைப்படத் துறையினர் படப்பிடிப்புக்காக சுவிட்சர்லாந்துக்கு செல்வது மற்றும் இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் மற்றும் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் சுவிஸ் வீராங்கனை மார்டினா ஹிங்கிசுடன் இணைந்து பல கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றது உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டினார்.
என்எஸ்ஜியில் உறுப்பினராவதற் காக கடந்த மே 12-ம் தேதி இந்தியா விண்ணப்பம் செய்தது. வரும் 9-ம் தேதி வியன்னாவிலும் 24-ம் தேதி சியோலிலும் நடைபெறும் என்எஸ்ஜி கூட்டத்தில் இந்தியாவின் விண்ணப்பம் குறித்து பரிசீலிக்கப்பட உள்ளது.