ராஜ்நாத் வருகைக்கு எதிர்ப்பு: பாகிஸ்தான் அரசுக்கு ஹபீஸ் சயீத் எச்சரிக்கை

ராஜ்நாத் வருகைக்கு எதிர்ப்பு: பாகிஸ்தான் அரசுக்கு ஹபீஸ் சயீத் எச்சரிக்கை
Updated on
2 min read

ராஜ்நாத் சிங்கின் பாகிஸ்தான் வருகையை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்போவதாக ஜமாத் உத் தாவா இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத் அரசை எச்சரித்துள்ளார்.

'சார்க்' உள்துறை அமைச்சர்கள் மாநாடு, வரும் ஆகஸ்ட் 3 மற்றும் 4-ம் தேதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது. இதில், இந்தியா சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.

இந்நிலையில், ராஜ்நாத் சிங்கின் பாகிஸ்தான் வருகையை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்போவதாக ஜமாத் உத் தாவா இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக ஹபீஸ் சயீது கூறும்போது, "காஷ்மீரில் அப்பாவி இளைஞர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு ராஜ்நாத் சிங்கே பொறுப்பு. பாகிஸ்தான் அரசு ஒருபுறம் காஷ்மீரி மக்கள் மீதான இந்திய அரசின் அடக்குமுறையை கண்டித்து வருகிறது. மறுபுறம், ராஜ்நாத் சிங்குக்கு மாலை போட்டு வரவேற்கத் திட்டமிட்டுள்ளது. இது முற்றிலும் முரணானது.

காஷ்மீரிக்குச் சென்ற ராஜ்நாத் சிங்கை ஸ்ரீநகர் மக்கள் சந்திக்க மறுத்துவிட்டனர். அவர்களைப் போலவே பாகிஸ்தானின் ஆளும் பி.எம்.எல்-என் அரசும் ராஜ்நாத் சிங்குக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

ஒருவேளை திட்டமிட்டபடி ஆகஸ்ட் 3-ம் தேதி ராஜ்நாத் சிங் இஸ்லாம்பாத் வந்துவிட்டால், ஜமாத் உத் தாவா சார்பில் நாடு தழுவிய கண்டனப் போராட்டம் நடைபெறும். இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி, பெஷாவர், குவெட்டா, முல்தான், பைசலாபாத், முசாபர்பாத் ஆகிய நகரங்களில் போராட்டம் நடத்தப்படும்.

பாகிஸ்தான் அரசு வேண்டுமானால் நெருக்கடிகளுக்கு கட்டுப்பட்டு ராஜ்நாத் சிங்கை வரவேற்கலாம். ஆனால், பாகிஸ்தான் மக்கள் மனங்கள் எப்போதும் காஷ்மீர் மக்களுடனேயே இருக்கும்" என்றார்.

இதற்கிடையில் பாகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சையது சலாஹுதீன் தலைமையில் 'ஆசாதி காஷ்மீர்' என்ற பேரணி நடைபெற்றது.

அப்பேரணி பொதுக்கூட்டத்தில் பேசிய சலாஹுதீன், "சார்க் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ராஜ்நாத் சிங்கை பாகிஸ்தான் அரசு அழைத்திருக்கக் கூடாது. காஷ்மீரில் புர்ஹான் வானி கொலைக்கு எதிராக போராடிய மக்களில் 49 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில் குறைந்தபட்சம் டெல்லியில் உள்ள தூதரையாவது பாகிஸ்தான் அரசு திரும்பப் பெற்றிருக்க வேண்டும். இந்தியாவுடனான தூதரக உறவை முறித்து காஷ்மீர் கொலைகளுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்.

ஒன்று காஷ்மீருக்கான கோரிக்கையை வலுப்படுத்த வேண்டும் அல்லது இந்தியாவுடன் நட்பு நாடாக இருக்க வேண்டும் அதை விடுத்து தந்திரமாக செயல்படுவதை பாகிஸ்தான் அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

திட்டமிட்டபடி பயணம்

இதனிடையே, ராஜ்நாத் சிங், சார்க் மாநாட்டில் பங்கேற்பதை இந்திய அரசு உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக உள்துறை இணை யமைச்சர் கிரண் ரிஜிஜு கூறும் போது, “சார்க் மாநாடு பன்னோக்கு மாநாடு. சில பொறுப்புடைமைகள் உள்ளன. கருத்து சொல்வதற்கோ, பாகிஸ்தான் உள்துறை அமைச் சரை தனியாக சந்திக்கவோ ராஜ்நாத் சிங் அங்கு செல்ல வில்லை” என தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் அப்பாவி மக்களை இந்திய ராணுவம் கொலை செய்வதாக குற்றம் சாட்டி லாகூரில் நேற்றுமுன்தினம் கண்டன பேரணி நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in