

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் மர்ம நபர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில், போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்; மூன்று பேர் காயமடைந்தனர். மிகவும் பரபரப்பாக இயங்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில், உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்தது. ராணுவ உடை அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தனது துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்ததாகவும், அதில் படுகாயமடைந்த போக்குவரத்து பாதுகாப்பு அதிகர் ஒருவர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, காவல் துறையினரால் அந்த மர்ம மனிதர் சுற்றி வளைக்கப்பட்டார். போலீஸ் பிடியில் உள்ள அந்த நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தால், லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, அதிபர் ஒபாமாவிடம் விவரிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.