

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது அந்த நாட்டு ராணுவத்தால் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்ட இடங்களின் புகைப்படங்களை அமெரிக்கா பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.
அமெரிக்க தூதரகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் அந்த புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதில் செயின்ட் அந்தோனி மைதான புகைப்படம் பிரதானமாக இடம்பெற்றுள்ளது. 2009-ம்
ஆண்டில் இலங்கை ராணுவத்தின் பீரங்கி தாக்குதலில் நூற்றுக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் கொல்லப்பட்ட இடம் என்று அந்த புகைப்படத்துக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணுவத்தால் பொதுமக்களின் புகலிடங்களாக அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு மண்டலங்களின் புகைப்படங்களும் அமெரிக்க தூதரக ட்விட்டர் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
2009 மே மாதம் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் 40,000-க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை இலங்கை அரசு ஆரம்பம் முதலே மறுத்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீபன் ஜே.ராப், இலங்கையில் தமிழர் பகுதிகளை வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டார். அவரது சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்து ட்விட்டரில் ராணுவ போர்க் குற்றங்கள் தொடர்பான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அமெரிக்க தூதரகம் முன்பு இலங்கையில் ஆர்ப்பாட்டம்
அமெரிக்க தூதரும், அந்நாட்டின் குளோபல் கிரிமினல் ஜஸ்டிஸ் துறையின் தலைவருமான ஸ்டீபன் ஜே ராப், ஒரு வார கால பயணமாக இலங்கை வந்துள்ளார். இவர் புதன்கிழமை யாழ்ப்பாணம் சென்று, தமிழ் தேசிய கூட்டணி தலைவர்களை சந்தித்தார். பின்னர் அவர், “ஜெனீவாவில் வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் போர்க் குற்றங்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக 3வது தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது” என்றார்.
இந்நிலையில் கொழும்புவில் தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் அமெரிக்க தூதரகத்தை நோக்கி பேரணியும், பின்னர் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இப்போராட்டத்தில், இலங்கைக்கு எதிரான நியாயமற்ற நடவடிக்கைகளை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.