Last Updated : 24 Aug, 2016 04:18 PM

 

Published : 24 Aug 2016 04:18 PM
Last Updated : 24 Aug 2016 04:18 PM

முக்கிய ரத்தக்குழாய் வெடிப்பை தடுக்கும் கிரீன் டீ : ஆய்வில் தகவல்

அடிவயிறு, இடுப்பெலும்புப் பகுதி, மற்றும் கால்களுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய ரத்தக்குழாய் வெடிக்காமல் கிரீன் டீ தடுக்கும் என்று ஜப்பான், கீயோட்டோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிரீன் டீ-யில் உள்ள பாலிபினால் ரத்தக்குழாய் வெடிப்பை தடுப்பதாக எலிகளை வைத்து மேற்கொண்ட பரிசோதனைகளில் தெரியவந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ரத்தக்குழாய் வெடிப்பு திடீரென நிகழ்வதால் சிகிச்சைக்கு நேரமின்றி உயிரிழப்பு ஏற்படுகிறது.

ஆய்வாளர்களில் ஒருவரான கென்ஜி மினகட்டா தெரிவிக்கையில், “அடிவயிறு, இடுப்பெலும்பு மற்றும் கால்களுக்கு ரத்தத்தை எடுத்து செல்லும் முக்கிய ரத்தக்குழாய் திடீரென புடைத்து வீங்கி வெடிக்க வாய்ப்புள்ளது, இது திடீரென ஏற்படுவதால் தடுப்பது கடினம். ஏனெனில் இது ஏற்படுவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியாது” என்றார்.

மேலும், அது புடைத்து வீங்கி, வெடிக்கும் முன்பாக கண்டுபிடிக்கப்பட்டால் அதனை அறுவை சிகிச்சை மூலம் செயற்கை ரத்தக்குழாய் பொருத்தியோ ஸ்டெண்ட் வைத்தோ தடுக்கலாம். இப்போதைக்கு மருந்துகள் ரீதியான சிகிச்சை இதற்கு இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.

கிரீன் டீ, புற்றுநோயைத் தடுக்க, இருதய நோய்களைத் தடுக்கவல்லது என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

ஆய்வின் தலைவர் ஷூஜி செடோசாகி கூறும்போது, கிரீன் டீ-யில் உள்ள பாலிபெனால் என்பது எலாஸ்டின் என்ற புரோட்டீனை மறு உற்பத்தி செய்து குறிப்பிட்ட ரத்தக்குழாய்க்கு சற்று தாங்கும் தன்மையை அளிக்கிறது. எலாஸ்டின் குறைவால் ரத்தக்குழாய் சுவர்கள் அழற்சியால் புடைத்து வீங்குகிறது. இந்நிலையில் கிரீன் டீ இதனைத் தடுக்கும் என்று ஆய்வில் தெரியவந்தது, என்றார்.

இந்த ஆய்வின் போது, எலிகளில் சுரப்பியை உருவாக்கி அடிவயிற்று ரத்தக்குழாய் அழற்சி ஏற்படுமாறு செய்தனர். இதில் கிரீன் டீ கொடுக்கப்பட்ட எலிகளுக்கு ரத்தக்குழாய் அழற்சி ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மற்றொரு ஆய்வாளர், ஹிடேடோஷி மசுமோட்டோ கூறும்போது, “உலகிலேயே அதிக ஆயுளுடன் வாழ்பவர்கள் ஜப்பானியர்கள். 80% மக்கள் தொகையினர் தினசரி கிரீன் டீ எடுத்து கொள்கின்றனர். எனவே தினசரி அடிப்படையில் கிரீன் டீ எடுத்துக் கொள்வது அடிவயிற்றுக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் ரத்தக்குழாய் புடைப்பை தடுக்கிறது என்பதை நாங்கள் அறிந்தோம்.

எதிர்கால ஆய்வுகளில் எவ்வளவு கிரீன் டீ எடுத்துக் கொண்டால் நோயைத் தடுக்கலாம் என்பது துல்லியமாகக் கணக்கிட்டு கூறப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x