Published : 06 Oct 2014 10:02 AM
Last Updated : 06 Oct 2014 10:02 AM
பணிநிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி போராடி வரும் என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக இம்மாதம் 9ம் தேதி மாவட்ட அளவில் அனைத்துக் கட்சி மற்றும் தொழிற்சங்கம் சார்பில் என்எல்சி தலைமை அலுவல கத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பணிநிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர் சங்கங்கள் சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் செப்டம்பர் 3 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம் நீடித்துவரும் நிலையில் திமுக மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நெய்வேலி தொமுச அலுவலகத்தில் நேற்று அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், பாமக, பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மதிமுக, தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் எஸ்யுசிஐ உள்ளிட்டக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்துக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் அக்டோபர் 9ம் தேதி என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவது எனவும், அதைத்தொடர்ந்து அக்டோபர் 11ம்தேதி மாவட்டத் தலைநகரான கடலூரில் ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.