Published : 20 Jun 2017 09:43 AM
Last Updated : 20 Jun 2017 09:43 AM

உலக மசாலா: வாழ்நாள் முழுவதும் சேமித்தாலும்...!

ஜப்பானில் மிக ஆடம்பரமான ரயில் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. 30 பேர் இந்த ரயிலில் முதல் முறை பயணத்தை மேற்கொண்டனர். 2 இரவுகள், 3 பகல்களைக் கொண்ட இந்தச் சுற்றுப் பயணத்தில் பசுமையான வயல்வெளிகள், கடற்கரைகள், பழங்காலப் புனிதத் தலங்கள் போன்றவற்றைத் தரிசிக்கலாம். இருவர் தங்கும் விதத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட ஆடம்பரமான அறைகள் இருக்கின்றன. 5 நட்சத்திர விடுதிகளைப் போன்று மார்பிள் தரை, குளியல் தொட்டி, மிகப் பெரிய படுக்கைகள், அலங்காரம், குளிர்சாதன வசதி, இணைய வசதி போன்றவை செய்யப்பட்டிருக்கின்றன. புகழ்பெற்ற சமையல் கலைஞர்களால் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. உணவை ருசித்துக்கொண்டே கண்ணாடிகள் வழியே இயற்கை எழிலை ரசிக்கலாம். இரவு உணவுக்குப் பிறகு பியானோ இசையைக் கேட்கலாம். பார் வசதியும் உண்டு. விலை அதிகமாக இருந்தாலும் இந்த ரயிலில் பயணம் செய்வதற்கும் ஆட்கள் காத்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. “இருவருக்கு 14 லட்சம் ரூபாய் கட்டணம். வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத இந்தப் பயணத்துக்குக் கட்டணம் பெரிய விஷயமில்லை” என்கிறார் அயக் கோபாயாஷி. 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியைக் கருத்தில் கொண்டு இந்த ஆடம்பர ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகளைக் காண வரும் வெளிநாட்டினரை இந்த ரயில் அதிகம் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ்நாள் முழுவதும் சேமித்தாலும்...!

இத்தாலியைச் சேர்ந்த 21 வயது இலரியாவும் இந்தோனேஷியாவிலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் ஜுஃபில்கரும் சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமாகி, காதலித்து வந்தனர். தன் காதலரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக, உணவகத்தில் வேலை செய்யும் இலரியா, இரண்டு ஆண்டுகள் பணத்தைச் சேமித்து வந்தார். தேவையான பணம் சேர்ந்தவுடன் தன் பெற்றோரிடம் வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டு, இந்தோனேஷியா கிளம்பினார். நீண்ட பயணத்துக்குப் பிறகு, காதலர் வசிக்கும் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கே ஜுஃபில்கர் காத்திருந்தார். இருவரது காதல் கதையை அறியாத கிராம மக்கள் குழப்பமடைந்தனர். அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இலரியா தான் திருமணம் செய்துகொள்ள வந்திருப்பதாகச் சொன்னார். வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதால் முறையான அனுமதி பெற்ற பிறகே திருமணம் செய்ய முடியும் என்றார்கள். சில வாரங்கள் காத்திருந்து, முறையான அனுமதி பெற்று, மே மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

ஜெயித்த காதல்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x