

தென்னாப்பிரிக்காவில் உள்ள பள்ளிகளில் பயிலும் இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க மாணவர்கள் ஆப்பிரிக்கான் மொழியைக் கற்க அதிக ஆர்வம் காட்டாத நிலையில், அந்த மொழியில் இந்திய மாணவர் முன்னிலை வகிக்கிறார். அவர் கடந்த ஆண்டின் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த தேஜிந்தர் அவரது மனைவி அமர்ஜீத் (ஆசிரியை), மகன் அங்கத் சேனா(13) ஆகியோர் கடந்த 2011-ல் தென்னாப்பிரிக்காவின் பிரடோரியாவில் குடியேறினர். அங்குள்ள தெரசா பார்க் தொடக்கப் பள்ளியில் சேனா படித்து வருகிறார்.
அங்கு ஆப்பிரிக்கான் மற்றும் ஜுலு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை இரண்டாவது மொழிப் பாடமாக படிக்க வேண்டும். பெரும்பாலான மாணவர்கள் ஆப்பிரிக்கான் மொழியைத் தேர்வு செய்வதில்லை. ஆனால், சேனா ஆப்பிரிக்கான் மொழியைத் தேர்ந்தெடுத்து படித்து வருகிறார்.
இரண்டு ஆண்டுகள் மட்டுமே இந்த மொழியைப் படித்திருந்த சேனா, கடந்த ஆண்டு தேசிய அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடித்தார். எனினும், இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் 2-ம் இடத்தைப் பிடித்தார்.
இதுகுறித்து சேனா கூறுகையில், "முதலில் எந்த மொழியைத் தேர்ந்தெடுப்பது என குழப்பமாக இருந்தது. பின்னர், ஆப்பிரிக்கான் மொழியைத் தேர்வு செய்தேன். இந்த மொழியைக் கடந்த ஆண்டுதான் படிக்கத் தொடங்கினேன். ஆனால், இந்தப் பாடத்தைத் தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தேன். அதனால்தான் முதலிடம் பிடிக்க முடிந்தது" என்றார்.
ஆப்பிரிக்கான் மட்டுமல்லாது ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளிலும் நன்றாக பேசுவார் சேனா.
பொறியாளரான சேனாவின் தந்தை, டாடா குழும நிறுவனத்துக்காக மூன்று ஆண்டுகள் பணி ஒப்பந்த அடிப்படையில் தென்னாப்பிரிக்காவில் பணிபுரிகிறார். வரும் டிசம்பரில் நாடு திரும்புகிறார். தனது தந்தையைப் போல மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படிக்க விரும்புவதாக சேனா தெரிவித்துள்ளார்.