

அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில் போலீஸாருக்கு எதிராக நடைபெற்ற போராட்ட பேரணியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 போலீஸ் அதிகாரிகள் பலியாகினர். 7 பேர் படுகாயமடைந்தனர்.
அந்தப் பேரணிக்கு 'கருப்பு இன மக்களின் உயிரும் கருத்தில்கொள்ளத்தக்கது' (Black Lives Matter) எனத் தலைப்பிடப்பட்டிருந்தது.
பேரணி டல்லாஸ் டவுன்டவுனில் சென்று கொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கிச் சூடு ஏற்படவே போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆங்காங்கே சிதறி ஓடினர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.
அமெரிக்காவின் லூசியாணா, மினசோட்டா மாகாணங்களில் இரு வேறு சம்பவங்களில் கருப்பின இளைஞர்கள் இருவர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். வெள்ளை இன போலீஸ் அதிகாரிகளை கண்டித்து சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கருப்பின இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டல்லாஸ் மாகாணத்தில் போராட்டம் நடைபெற்றது. அப்போது உயரமான இடத்தில் மறைந்திருந்த துப்பாக்கி ஏந்திய சிலர் போலீஸாரை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 5 போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டலாஸ் போலீஸாரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள சந்தேக நபரின் புகைப்படம்.
சம்பவம் குறித்து டல்லாஸ் போலீஸ் தலைவர் டேவிட் பிரவுன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "துப்பாக்கி ஏந்திய இருவர் மறைவிடத்தில் இருந்து போலீஸாரை குறிவைத்து சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஒருவரை பிடித்து வைத்திருக்கிறோம்" என்றார்.
போராட்டத்துக்கான காரணமான 2 சம்பவங்கள்:
அமெரிக்காவின் லூசியாணா மாகாணம், பேட்டன் ரூஜ் நகரில் கருப்பினத்தை சேர்ந்த ஆல்டன் ஸ்டெர்லிங் (37) அப்பகுதியில் சி.டி. விற்பனை செய்து வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை அவர் வழக்கம்போல் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் துப்பாக்கி வைத்திருப்பதாக குற்றம் சாட்டிய போலீஸார், அவரை கீழே தள்ளி சுட்டுக் கொன்றனர். இந்த காட்சிகள் அங்கிருந்த கடைகளின் கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.
மினசோட்டா மாகாணம், செயின்ட் பால் நகரத்தைச் சேர்ந்த கருப்பின இளைஞர் பிலாண்டோ காஸ்ட்டி (32). இவர் கடந்த புதன்கிழமை தனது தோழியுடன் காரில் சென்று கொண்டிருந்தார். பால்கன் ஹைட்ஸ் பகுதியில் போலீஸ்காரர் ஒருவர் காரை வழிமறித்தார். காரின் பின்பக்க விளக்குகள் உடைந்திருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த போலீஸ்காரர், கருப்பின இளைஞர் பிலாண்டோ காஸ்ட்டியை துப்பாக்கியால் சுட்டு கொன்றார்.