

தெற்கு சூடானில் பணியாற்றும் ஐ.நா. அமைதிப் படையைச் சேர்ந்த இந்திய டாக்டர்களின் பணி அளப்பரியது என்று ஐ.நா. சபை புகழாரம் சூட்டியுள்ளது.
அந்த நாட்டு அதிபர் சல்வா கிர்க், திங்கா என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் துணை அதிபர் ரிக் மசார், நியூர் என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். இருவரின் ஆதரவாளர்களும் இப்போது ஆயுத சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அங்கு எண்ணெய் வளமிக்க யுனைட்டி மகாணத்தின் தலைநகரான மலாகல் அரசுப் படைகள், எதிர்ப்புப் படைகள் என கைமாறிக் கொண்டே இருக்கிறது. எப்போதும் குண்டுமழை பொழியும் அந்நகரில் ஐ.நா. அகதிகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த முகாமில் ஐ.நா. அமைதிப் படையைச் சேர்ந்த இந்திய வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு ஐ.நா. சார்பில் மருத்துவமனையும் நடத்தப்படுகிறது. அதில் இந்திய டாக்டர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் அந்த மருத்துவமனையில் 976 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 134 பெரிய அறுவைச் சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. 29 கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து ஐ.நா. மனிதநேய- அவசரகால மீட்புத் துறை ஒருங்கிணைப்பாளர் வலாரி அமோஸ் நிருபர்களிடம் பேசியபோது, மலாகலில் பணியாற்றும் இந்திய டாக்டர்கள் நூற்றுக்கணக் கானோரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர், அவர் களின் பணி பாராட்டுக்குரியது என்றார்.-பி.டி.ஐ.