

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் பாதுகாப்புக் கருதி, வெளிநாட்டு அரசாங்கங்களை வேவு பார்க்கும் பணியை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்ளும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு (என்எஸ்ஏ) உலகத் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை உளவறிந்தது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், என்எஸ்ஏவுக்கு ஆதரவாக ஒபாமா முதன்முதலாக மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜெர்மனி செய்தி தொலைக் காட்சியான இஸட்.டி. எஃப்புக்கு ஒபாமா அளித்த பேட்டியில் இது தொடர்பாகக் கூறியிருப்பதாவது:
ஜெர்மனி மற்றும் இதர நாடுகளின் உளவுத் துறைகளைப் போலவே, அமெரிக்க உளவுத் துறையும் வெளிநாட்டு அரசாங்கங்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை. ஊடகங்களில் வெளிவரும் செய்திகளைப் படிக்க முடிகிற போது, உளவு அமைப்புகளைக் கட்டுப்படுத்துவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.
அமெரிக்க மக்கள் மற்றும் உலக மக்களின் தனி மனித சுதந்திரம் மற்றும் நாட்டின் பாதுகாப்புக் காக உளவுத்துறையின் செயல் பாடுகள் ஆகியவற்றுக்கு இடையே ஒரு சமநிலையைப் பேண வேண்டியிருக்கிறது.
அதே சமயம் கண்காணிப்பு நடவடிக்கைகள், ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கலின் நட்பு மற்றும் நம்பிக்கைக்கு ஊறுவிளைவிக்க அனுமதிக்க மாட்டேன். நான் அமெரிக்க அதிபராக இருக்கும் வரை, ஜெர்மன் பிரதமர் இது குறித்துக் கவலைப்படத் தேவை யில்லை என்றார் அவர்.-பி.டி.ஐ.