

"தன்பாலின உறவாளராக இருப்பது கடவுள் தந்த வரம். நான் ஒரு தன்பாலின உறவாளராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்" என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள 'ப்ளூம்பெர்க் பிசினஸ்வீக்' என்ற பிரபல பொருளாதார வார இதழுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் எழுதிய கட்டுரையில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது குறித்து வெளிப்படையாக தான் கூறுவதால் தன்னை போல உள்ள பலரும் தங்களது தாழ்வுமனப்பான்மையை விட்டுவிடுவர் என்று நம்புகிறேன். தொடர்ந்து சமத்துவத்துக்காக பாடுபடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
பின்னர் இது குறித்து பொது நிகழ்ச்சியில் பேசும்போது, "நான் எனது பாலின உணர்வை எப்போதும் மறுத்ததில்லை. அது குறித்து வெளிப்படையாக நான் பேசியதும் இல்லை.
ஆனால், எனது பாலின சார்பு குறித்து பலரிடம் வெளிப்படையாக விவாதித்துள்ளேன். இதனை எனது ஆப்பிள் நிறுவன சக ஊழியர்கள் பலரும் அறிவார்கள். ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றி கொண்டிருப்பதை எனது அதிர்ஷ்டமாக பார்க்கிறேன். படைப்பாளர்களுக்கும் ஆக்கப்பூர்வ மனிதர்களுக்கு இது போன்ற ஒரு நிறுவனம் அமைவதில் தான் மனிதர்களுக்குள் உள்ள வேறுபாடுகள் கலைய உதவியாய் இருக்கும். எனவே நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, இது போல வேறு எங்கும் சகாக்கள் அமையமாட்டார்கள்.
எனது சுய உணர்வுகளை பிறரிடம் கூறாமல் இருப்பதால் எனது முக்கியமான பல வேலைகள் தடைபடுவதை உணர்ந்ததை அடுத்தே நான் என்னை வெளிப்படுத்த ஆரம்பித்தேன். தன்பாலின உறவாளராக இருப்பதை கடவுள் தந்த வரமாக நினைத்து பெருமிதம் கொள்கிறேன்" என்று கூறினார்.
சர்வதேச பிரபலங்கள் பாராட்டு
சர்வதேச அளவில் உயர்ந்த பொறுப்பிலும் பல இளைஞர்களால் கூர்ந்து கவனிக்கப்படுபவருமான டிம் குக்-ன் இந்த வெளிப்படையான மனம் திறந்த பேச்சு பலரையும் கவர்ந்துள்ளது.
டிம் குக்கின் பேச்சை தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் தன்பாலின உறவாளர் (Gay) என்றே ஹேஷ்டேகை ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.
தன்பாலின உறவாளராக இருக்கும் பலரும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்போரும் ட்விட்டரில் தொடர்ந்து டிம் குக்குக்காக ஆதரவுக் குரல் கொடுக்கின்றனர்.
தொடர்ந்து தொழில்நுட்ப துறையை சார்ந்த மற்றும் டிம் குக்குக்கு நிகரான பொறுப்புகளில் இருக்கும் பல பிரபலங்கள் 'தன்பாலின உறவாளராக தான் இருப்பது குறித்து வெளிப்படையான கருத்து வெளியிட்டமைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். அதில் சில...
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் கூறும்போது, "உண்மையாக இருப்பது என்றால் என்ன என்பதை காட்டிவிட்டீர்கள் கிம், தைரியமான - உண்மையான தலைவர் நீங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மைக்ரோசாப்டின் சி.இ.ஓ.வும் ஹைதராபாதை சேர்ந்தவருமான சத்யா நாதெள்ளா, "வாழ்க்கை மிகவும் விடாப்பிடியானது. இதில் நாம் பிறருக்காக என்ன செய்தோம் என்பது தான் முக்கியம். நீங்கள் உணர்வுப்பூர்வமாக வாழ்கிறீர்."
கூகுள் நிறுவன தயாரிப்புகளின் தலைமை செயல் அதிகாரியான தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை, "டிம் உங்களது பேச்சு மிகவும் உற்சாகமானது. ஊக்குவிக்க கூடியது. நிச்சயம் மிக பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் பில் க்ளின்டன், "தென்னகத்தை சேர்ந்த ஒருவனாக இதனை நான் வெறித்தனமாக பாராட்டுகிறேன். ஹேட்ஸ் ஆப்" என்றார்.
பிரபல எழுத்தாளரும் நாவலாசிரியருமான சேத்தன் பகத், "ஆப்பிள் சி.இ.ஓ. 'கே'-வாக இருப்பதில் பெருமையடைகிறார். இதே இந்தியாவாக இருந்தால் அவரை குற்றவாளி என்றிருப்பார்கள். ஏனென்றால் நாம் நமது முகத்தை மண்ணில் புதைத்து வைத்துள்ளோம். #Sec377 சட்டப்பிரிவை தடுக்க முடியாமல்" என்று கூறியுள்ளார். மேலும் பலரும் ஆதரவான நிலைப்பாட்டில் கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.