

அமெரிகாவின் அட்லான்டா விமான நிலைய சுங்க அதிகாரிகளால் காவலில் வைக்கப்பட்ட இந்தியர் ஒருவர் திடீரென மரணமடைந்தார்.
அமெரிக்காவின் அட்லான்டா நகரின் விமான நிலையத்துக்கு கடந்த வாரம் வந்த இந்தியர் ஒருவர் சரியான ஆவணங்கள் இல்லாததால் சுங்க அதிகாரிகளால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். அதுல் குமார் பகுபாய் என்ற அந்த நபர் காவலில் இருக்கும்போதே காலமானார்.
இது தொடர்பாக அட்லான்டா விமான நிலைய சுங்க அதிகாரிகள் கூறும்போது, "அதுல் குமார் பகுபாய்(58) கடந்த 10-ம் தேதி ஈகுவேடார் நாட்டில் இருந்து அட்லான்டாவுக்கு வந்தார். அவரிடம் விமான பயணத்துக்கான சரியான ஆவணங்கள் இல்லை. இதனையடுத்து அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். அட்லான்டா தடுப்புக்காவல் மையத்தில் வைக்கப்பட்டார்.
அவருக்கு உயர் ரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும் இருந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக அவர் கூறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் மரணமடைந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
இது தொடர்பாக இந்தியத் தூதரக பிரதிநிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூலமாக படேலின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது"
அமெரிக்காவில் இது போன்று போலீஸ் காவல், சுங்க அதிகாரிகளின் தடுப்புக் காவலில் வைக்கப்படுவோர் மரணமடைவது மிகவும் அரிது என்று கூறப்படுகிறது. ஆனால், 2017-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து அமெரிக்க குடியேற்று மற்றும் சுங்கம், அமலாக்கத் துறையினரால் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டவர்களில் 8 பேர் பலியாகியுள்ளனர்.