

பூமியில் இருந்து நாசா அனுப்பி வைத்த ஜூனோ விண்கலம் வியாழன் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந் தது. இதையடுத்து அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் சுதந்திர தின கொண்டாட்டம் களைகட்டியுள்ள அதே வேளையில் நாசா விண் வெளி ஆய்வு மையத்தில் பணி யாற்றி வரும் விஞ்ஞானிகளின் உற்சாகமும் கரைபுரண்டு ஓடுகிறது. வியாழன் கிரக ஆராய்ச்சிக்காக அனுப்பி வைக்கப்பட்ட ஜூனோ விண்கலம் வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதே இதற்கு காரணம்.
5 ஆண்டுகளாக பயணம்
சுமார் ரூ.7,200 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டு 2011 ஆகஸ்ட் 5-ல் கேப் கனாவெரல் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஜூனோ விண்கலம் 5 ஆண்டுகளாக பயணித்து அண்மையில் வியாழனின் காந்தபுலத்துக்குள் நுழைந்தது.
கடந்த 4-ம் தேதி வியாழனின் சுற்றுவட்டப்பாதைக்குள் ஜூனோ வை நிலை நிறுத்துவதற்கான பணிகள் தொடங்கின. இந்திய நேரப்படி அன்று காலை 8.48 மணிக்கு ஜூனோவின் பிரதான இன்ஜின் இயக்கப்பட்டது. பின்னர் விண்கலத்தின் திசைவேகம் நொடிக்கு 542 மீட்டர்களாக குறைக்கப்பட்டதும் ஈர்ப்பு விசை யால் மோதி வெடிக்கும் அபாய கட்டத்தை ஜூனோ கடந்தது.
தொடர்ந்து வியாழன் கிரகத்தை சுற்றும் வகையி லான உத்தரவும் கச்சிதமாக பிறப்பிக்கப்பட்டு சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.