

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து தீர்வு பரிந்துரைக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழுவின் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்வுக் குழு என்ற பெயரிலான இந்த குழு அமைக்கப்பட்டதிலிருந்து 6 மாதம் வரை தமக்கிட்ட பணிகளை செய்து முடிக்க காலம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன்படி அதன் ஆயுள்காலம் வியாழக்கிழமை முடிந்தது.
இந்நிலையில், 2014ம் ஆண்டு ஜூன் 21 வரை இதன் பதவிக்காலத்தை நீட்டிக்கலாம் என இந்த குழுவின் தலைவரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பரிந்துரைத்திருந்தார். மாகாண அரசுகளிடமிருந்து காவல்துறை, நில உரிமை அதி காரங்களை பறிக்க இலங்கை அரசு எடுத்த நடவடிக்கை தோல்வியில் முடிந்ததால், ஒரே நாடு என்ற கட்ட மைப்பில் இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க அரசியல் மற்றும் அரசியலமைப்பு சட்ட ரீதியில் எடுக்க வேண்டிய நட வடிக்கைள் பற்றி பரிந்துரைத்து அறிக்கை தரும் பணிக்காக இந்த குழு அமைக்கப்பட்டது. மாகாண அரசுகளின் அதிகாரத்தை குறைக்கக்கூடாது என இலங்கைக்கு இந்தியா கண்டிப்புடன் தெரிவிக்கவே தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து தீர்வு காண நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நாடாளுமன்ற தேர்வுக் குழுவை எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன.
இந்தியாவின் தலையீட்டால் 1987ல் அரசமைப்புச் சட்டத்தின் 13 வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன் பலனாக வடக்கு மாகாண அரசு உள்பட 9 மாகாண அரசுகள் ஏற்பட்டன. மாகாண சுயாட்சி கோரிக்கை விடுத்த தமிழ் சிறுபான்மையினரின் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் மாகாண சபைகள் அமைக்கப்பட்டன. எனினும் மாகாண அரசுகளுக்கு, 13வது திருத்தச்சட்டத்தின்படி
வழங்கப்படவேண்டிய அதிகாரங்கள் தரப்படவில்லை என்றும் எதிலும் மாகாண ஆளுநரின் தலையீடு இருப்ப தாகவும் கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் நடந்த தேர்தலையடுத்து வடக்கில் மாகாண சபை அமைக்கப்பட்டாலும், தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட முதல்வரின் நிர்வாகத்துக்கு எந்தவித அதிகாரங்களும் 13ம் திருத்தத்தின்படி வழங்கப்படாமல், தொடர்ந்து ஆளுநர் ஆட்சியே நடக்கின்றது என்ற கருத்து நிலவுகிறது.-பிடிஐ