

ரஷ்யாவுக்காக வேவு பார்த்த அமெரிக்க கடற்படை முன்னாள் வீரர் ராபர்ட் ஹாப்மேனுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க கடற்படையின் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றிய ஹாப்மேன் மீது எப்.பி.ஐ. புலனாய்வு அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. கடற்படை நீர்மூழ்கிக் கப்பலில் எலெக்ட்ரானிக் சென்சார் தகவல்களை சேகரிக்கும் முக்கிய பொறுப்பில் இருந்த அவர், எதிரி நாடுகளுக்கு தகவல்களை அளித்ததாக சந்தேகிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரஷ்ய உளவாளிகள் போன்று நடித்து ராபர்ட் ஹாப்மேனை அணுகிய எப்.பி.ஐ. அதிகாரிகள் சில முக்கிய தகவல்களைக் கோரினர்.
அதன்படி அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு அமெரிக்க கடற்படையின் ரகசிய தகவல்களை, ஹாப்மேன் 3 முறை அளித்ததாகக் கூறப்படுகிறது.
எதிரி நாடுகளின் போர்க் கப்பல்களை அமெரிக்க கடற்படை எவ்வாறு கண்காணிக்கிறது, அமெரிக்க நீர்மூழ்கி போர்க் கப்பல் களின் ரகசிய நடமாட்டத்தைக் கண்டுபிடிப்பது எப்படி என்பன உள்ளிட்ட முக்கிய தகவல்களை ஹாப்மேன் அளித்ததாகக் கூறப் படுகிறது.
இதுதொடர்பாக எப்.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து கடந்த 2012 டிசம்பரில் அவரைக் கைது செய்தனர். அவர் மீதான வழக்கு வெர்ஜினியா மாகாணம், நார்போல்க் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
எப்.பி.ஐ. சார்பில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ஹாப்மேன், ரஷ்ய உளவாளிகளை பொறிவைத்து பிடிப்பதற்காக அவர்களுடன் ஒத்துழைப்பதுபோல் நாடகமாடியதாகத் தெரிவித்தார்.
ஓராண்டுக்கும் மேலாக இந்த வழக்கு நீடித்த நிலையில் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப் பட்டது. அதில் ஹாப்மேன் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.