

அமெரிக்க தீர்மானத்துக்கு தான் எவ்விதத்திலும் அஞ்சவில்லை என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரவுள்ளது.
இந்நிலையில், இலங்கை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ராஜபக்சே: "அமெரிக்க தீர்மானத்தின் மீது எந்த அச்சமும் இல்லை. இலங்கை அரசை நேரடியாக எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் மற்றும் தான்னார்வ தொண்டு நிறுவனங்கள் இதைப்போன்ற போலி பிரச்சாரங்களை சர்வதேச சமுதாயத்திற்கு கொண்டு சென்று குறுக்கு வழியில் வெற்றி காண முயற்சிக்கின்றன.
ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் நவி பிள்ளை நான்கு நாட்கள் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தவறான தகவல்களை சேகரித்துச் சென்ற அவர் அந்த தவறான தகவலின் அடிப்படையில் அறிக்கையை முன்வைத்திருக்கிறார். அந்த அறிக்கையை இலங்கை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது.
கியூபா, இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு எதிராகவும், இதைப்போன்ற ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே இத் தீர்மானத்தை பற்றி கவலைப்பட ஏதுமில்லை" என ராஜபக்ஷே தெரிவித்தார்.